×

காசாவில் 18வது நாளாக நீடிக்கும் உக்கிர போர் உணவு, குடிநீர் இல்லாமல் 23 லட்சம் மக்கள் தவிப்பு: இஸ்ரேல் குண்டுவீச்சால் பெரும் பீதி; ஒரேநாளில் 700 பேர் பலி

ஜெருசலேம்: ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக காசாவில் 18வது நாளாக இஸ்ரேல் பயங்கர தாக்குதலை தொடர்ந்தது. மேலும் காசா எல்லை முற்றுகையால் 23 லட்சம் மக்கள் உணவு, குடிநீர் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே அக்.7ம் தேதி தொடர்ந்த போர் 18வது நாளாக நீடித்து வருகிறது. தரைவழித்தாக்குதலுக்கு முன்னதாக காசா பகுதியை இஸ்ரேல் முற்றிலுமாக முற்றுகையிட்டு சீல் வைத்து உள்ளது. மேலும் தொடர்ந்து விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் சீல் வைத்ததில் இருந்து காசாவில் வசிக்கும் 23 லட்சம் மக்கள் உணவு, தண்ணீர் மற்றும் மருந்து இல்லாமல் தவித்து வருகின்றனர்.

காசாவிற்குள் அனுமதிக்கப்பட்ட நிவாரண உதவிகள் மட்டுமே மக்களுக்கு எட்டியுள்ளது. இதுவரை 54 லாரிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இஸ்ரேல் தாக்குதலில் குறைந்தது 5,791 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 2 ஆயிரம் பேர் சிறுவர்கள். 15,270 பேர் காயமடைந்ததாகவும் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 96 பாலஸ்தீனியர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். 1,650 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில் 1,400 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டவர்கள் உட்பட 222 பேர் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அதில் மனிதாபிமான அடிப்படையில் வயது முதிர்ந்த நூரிட் கூப்பர் (79), யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் (85) என 2 இஸ்ரேலியர்களை ஹமாஸ் நேற்று விடுவித்துள்ளது. இதுவரை மொத்தம் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் ரபா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் நேற்று காலை குண்டுமழை பொழிந்தது. சுமார் 400 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 700 பேர் பலியாகி விட்டதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர். தெற்கு லெபனானில் ஹிஜ்புல்லா அமைப்புகளின் நிலைகள், முகாம்கள் உள்ளிட்டவற்றின் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது.

ரபா பகுதியில் வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 28 பேர் கொல்லப்பட்டதாக காசா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 50 பேரை காணவில்லை. பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் நடத்தும் அல் அமல் மருத்துவமனை பகுதியிலும் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. காசாவில் வீடுகளை காலி செய்ய 4 ஆயிரம் பேர் அங்கு தஞ்சம் புகுந்துள்ளனர். இஸ்ரேலிய விமான தாக்குதலில் கான் யூனிஸ் நகரில் 4 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து சரிந்தது. அங்கு 32 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் அடங்குவர். இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் 33 பேர் ஒரே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேரும் அடங்குவர்.

* இஸ்ரேல் கல்வியாண்டு தொடக்கம் தாமதம்
இஸ்ரேல்-ஹமாஸ் போரால் இஸ்ரேலின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கல்வியாண்டின் ஆரம்பம் மீண்டும் தாமதமாகியுள்ளது. இந்த கல்வியாண்டு அக்டோபர் 19ல் தொடங்கத் திட்டமிடப்பட்டது. போரால் டிசம்பர் 3 வரை படிப்புகள் தொடங்கப்படாது என்று பல்கலைக்கழகத் தலைவர்கள் சங்கம் முடிவு செய்ததாக இஸ்ரேல் ராணுவ வானொலி தெரிவித்துள்ளது.

* களம் இறங்கிய அமெரிக்கா
இஸ்ரேலுக்கு உதவ ராணுவ ஆலோசகர்களை அனுப்புவதன் மூலம் அமெரிக்க பாதுகாப்புத் துறை இஸ்ரேலின் போர்த் திட்டமிடலுக்கு நேரடியாக உதவி செய்து வருகிறது. மேலும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் மீண்டும் மத்தியதரைக் கடலின் கிழக்கே நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

* இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் அதிபர்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் நேற்று இஸ்ரேல் சென்றார். அங்கு ஜெருசலேமில் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்ைக சந்தித்து பேசினார். அப்போது, ‘எங்கள் ஆதரவையும் ஒற்றுமையையும் தெரிவிக்கவும், உங்களின் வலியை பகிர்ந்து கொள்ளவும் தான் இஸ்ரேலுக்கு வந்தேன்’ என்றார். மேலும் டெல் அவிவ் விமான நிலையத்தில் போரால் பாதிக்கப்பட்ட 18 பிராங்கோ-இஸ்ரேலிய மக்களின் குடும்பங்களை மேக்ரோன் சந்தித்தார்.

* அமெரிக்க அதிபருடன் போப் பேச்சுவார்த்தை
போர் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன், போப் பிரான்சிஸ் தொலைபேசி வாயிலாக பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் செய்வதற்கான முயற்சி எடுக்குமாறும் உலகம் அமைதியை நோக்கி திரும்புவதற்கான கூட்டு முயற்சி எடுக்குமாறும் போப் கேட்டுக் கொண்டார்.

The post காசாவில் 18வது நாளாக நீடிக்கும் உக்கிர போர் உணவு, குடிநீர் இல்லாமல் 23 லட்சம் மக்கள் தவிப்பு: இஸ்ரேல் குண்டுவீச்சால் பெரும் பீதி; ஒரேநாளில் 700 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Fierce war ,Gaza ,18th day ,JERUSALEM ,Israel ,Hamas ,day ,Gaza border ,Dinakaran ,
× RELATED காசா தாக்குதலை கண்டித்து இஸ்ரேலிய...