×

சில மாதங்களாக மாயமான சீனா பாதுகாப்பு அமைச்சர் டிஸ்மிஸ்: நிதியமைச்சரின் பதவியும் பறிப்பு

தைபே: சீனாவில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் நிதி, பாதுகாப்புத் துறைகளின் அமைச்சர்கள் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நிதியமைச்சர் பொறுப்பேற்றுள்ளார். சீனாவின் அதிபராக 3வது முறையாக ஜின் பிங் கடந்தாண்டு அக்டோபரில் பதவியேற்றார். அதன் பின்னர், கடந்த ஜூலையில் சில மாதங்களாக காணாமல் போன வெளியுறவு அமைச்சராக இருந்த கின் கேங் அரசின் எவ்வித விளக்கமும் இன்றி அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், சீனாவில் நேற்று நடந்த அமைச்சரவை மாற்றத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மாயமான நிலையில் உள்ள பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லீ ஷாங்பூ எந்த விதமான முன் அறிவிப்புமின்றி திடீரென பதவி நீக்கப்பட்டார். அதே போல் நிதியமைச்சராக இருந்த லியூ குன் பதவி பறிக்கப்பட்டு லான் போன் புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்றார்.

இது தவிர, அறிவியில் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தவாங்க் ஷிகேங்கிற்கு பதிலாக யீன் ஹெஜுன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பு கடந்த 2012 முதல் அறிவியில் மற்றும் தொழில்நுட்பத் துறை துணை அமைச்சராக பதவி வகித்த வாங், 2018 மார்ச் முதல் அத்துறையின் அமைச்சரானார். ஆனால் தற்போது அவர் எந்த காரணமுமின்றி பதவி நீக்கப்பட்டார். ஆனால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்பூவிற்கு பதிலாக வேறு யாரும் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படவில்லை. சீன ஆளும் கட்சி கடந்த ஜூலை மாதம் கின் கேங்கை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அதற்கு முன்பு வெளியுறவு அமைச்சராக இருந்த வாங் யீயை மீண்டும் பதவியில் அமர்த்தியது.

கடந்த 3 மாதங்களில், இரண்டாவதாக காணாமல் போயிருப்பவர் பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்பூ ஆவார். கடந்த மார்ச் மாதம் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்ற இவர் ஆகஸ்ட் 27ம் தேதி உரை நிகழ்த்திய பின்பு இதுவரை காணவில்லை. இவர் அமெரிக்கா வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இவர் ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சீன தொலைக்காட்சி பத்திரிகையாளருடன் நெருக்கமாக இருந்ததால் பதவி நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சீன நாடாளுமன்றத்தின் நிலை குழு எடுத்த முடிவின் அடிப்படையில் இந்த அமைச்சரவை பதவி மாற்றம் நடந்திருப்பதாக சீன அரசு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை பொருத்தவரை, அமைச்சர்கள் கொள்கைகளை அமல்படுத்துபவர்களாக இருக்கின்றனர். ஆனால், வெளியுறவு அமைச்சராக இருந்த கின் கேங்கும், பாதுகாப்பு அமைச்சராக இருந்த லி ஷாங்பூவும் ஜின்பிங்கிற்கு நெருக்கமானவர்கள் மட்டுமின்றி, சீன கேபினட்டில் மூத்த அமைச்சர்களாக கூடுதல் அதிகாரத்துடன் வலம் வந்தவர்கள். தற்போது அவர்கள் இருவரும் காணாமல் போன பின்பு இதுவரை எங்கிருக்கிறார்கள் என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை. மேலும் அவர்கள் பதவி நீக்கப்பட்டிருப்பது அரசியலில் பெரும் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

The post சில மாதங்களாக மாயமான சீனா பாதுகாப்பு அமைச்சர் டிஸ்மிஸ்: நிதியமைச்சரின் பதவியும் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : China ,Defense ,Taipei ,Defense Minister ,Minister ,Dinakaran ,
× RELATED மழைக்காலம் வந்தாச்சு ரயிலில் ஒழுகும்...