சென்னை: பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு மற்றும் பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில்,வெள்ளிப்பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், நம் இந்திய மண்ணிற்கும் பெருமை சேர்த்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு மனமார்ந்த வாழ்த்துள். விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு நம் பாரத தேசத்திற்காக மென்மேலும் பல சாதனைகளை படைத்து நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளின் உயரம் தாண்டும் ஆட்டத்தில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இனிவரும் ஆட்டங்களில் மேலும் சாதிக்கவும் வாழ்த்துகிறேன். இதே உயரம் தாண்டும் போட்டிகளில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற இந்திய வீரர்கள் சைலேஷ் குமார், ராம்சிங் ஆகியோருக்கும் வாழ்த்துகள்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர் உயரம் தாண்டுதலில் சைலேஷ்குமார் தங்கமும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளியும், ராம் சிங் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர். அதே போல எப்51 கிளப் எறிதலில் பிரணவ் சூர்மா தங்கமும், தராம்பீர் வெள்ளியும், அமித்குமார் சரோஹா வெண்கலமும் வென்றுள்ளனர். கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியால் சாதனை படைத்திருக்கும் இந்திய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளிலும் பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்.
The post பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளி பதக்கம் மாரியப்பன் தங்கவேலுவுக்கு தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.