×

மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராக சுற்றி, நிகழ்ச்சிகளை நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக பேசுவதா? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக கடும் கண்டனம்

சென்னை: திமுக பொருளாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வெளியிட்ட அறிக்கை: மருதிருவர் விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசு தியாகிகளை மறந்துவிட்டது என்று கூறியிருக்கிறார். பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் உள்ளிட்ட எண்ணற்ற தியாகிகளை என்றென்றும் மதித்துப் போற்றுகின்ற அரசாகத் தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றை சித்தரிக்கும் ஊர்திகளை டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் சேர்க்க முடியாது என மறுத்து ஒன்றிய பா.ஜ. அரசு திருப்பி அனுப்பிய போது இந்த ஆளுநர் ரவி எங்கே போனார்?

விடுதலைக்காகப் பாடுபட்ட தமிழ்நாட்டுத் தலைவர்களில் அன்றைக்கு உயிருடன் இருந்த மூத்த தலைவர்களின் வீடு தேடிச் சென்று அவர்களுக்கு தாமிரப் பட்டயத்தை வழங்கினார் கலைஞர். விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கான மதிப்பூதியம் மாதம் 20 ஆயிரமாக உயர்த்தி வழங்குகிறது திராவிட மாடல் அரசு. தியாகிகளின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், மாதம் 10 ஆயிரம் ரூபாய் என்பதிலிருந்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறது.
விடுதலை வீரர்களைப் போற்றிப் பாராட்டுவதில் திமுக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல. இப்படி நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றிய இயக்கம்தான் திமுக.

விடுதலை நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை கேட்டு வாங்கிப் படித்திருந்தால் ஆளுநர் ரவிக்கு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாட்டு வீரர்களைப் பற்றிய அரிச்சுவடியாவது தெரிந்திருக்கும். விடுதலை நாளை துக்க நாளாக அறிவித்தவர்களைக் கொண்டாடுகிறார்கள் என்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளார் ஆளுநர் ரவி. துக்க நாள் என்று பெரியாரும், இன்ப நாள் என்று அண்ணாவும் ஒரே இயக்கத்தில் தங்கள் உள்ளத்துக் கருத்துகளை வெளியிட்டார்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் வரலாறு.

விடுதலையின் பயன் யாருக்குக் கிடைக்கும் என்பதை விளக்கிய பெரியார், ஆளுநர் ஆர்.என்.ரவி போன்ற பிற்போக்குவாத பத்தாம்பசலிகளின் கைகளில் அதிகாரம் சிக்கி நாசமாகும் என தொலைநோக்குப் பார்வையுடன் சொன்னார். அந்த பெரியார்தான், மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது, இந்த நாட்டுக்கு ‘காந்தி தேசம்’ என்று பெயர் வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதே நேரத்தில், விடுதலை நாட்டின் முதல் பயங்கரவாதச் செயலாக, மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றது கொடியவன் கோட்சே கும்பல்.

அந்த கோட்சேவையும் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றக் கூண்டில் ஏறியவர்களையும் கொண்டாடுகிற ‘பண்பாட்டை’க் கடைப்பிடிக்கும் இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மேடையிலும் திருவாய் மலர்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. திடீரென்று திருக்குறளில் “என்நன்றி கொன்றார்கும்” குறளை படித்திருக்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் கோப்புகளிலும், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களிலும் கையெழுத்திடாமல் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஊர்சுற்றித் திரியும் ஆளுநர் ரவிதான் அந்த குறளுக்குப் பொருத்தமானவர். திருக்குறளுக்கு ஏற்ப ஆளுநர் நடக்க வேண்டும். இல்லையென்றால் ஆளுநர் பதவியை விட்டு விலகி, அரசியல்வாதியாக, ஏன் பாஜ தலைவராகவோ – ஆர்.எஸ்.எஸ் தலைவராகவோ ஆகட்டும்.

The post மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராக சுற்றி, நிகழ்ச்சிகளை நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக பேசுவதா? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Governor ,RN ,Ravi ,Chennai ,Treasurer ,Parliamentary ,DMK Committee ,President ,DR ,Balu ,Marutiruvar ,RN Ravi ,
× RELATED அவைக்குறிப்பில் நீக்கியதை வீடியோவாக வெளியிட்ட ஆளுநர்