×

உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா தங்க அம்பாரி ஊர்வலம் கோலாகலம்: முதல்வர் சித்தராமையா மலர்தூவி துவக்கிவைத்தார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் கலாச்சாரத்தை போற்றும் தசரா விழாவின் இறுதிநாளான நேற்று விஜயதசமியை முன்னிட்டு தங்க அம்பாரி ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் சித்தராமையா மலர்தூவி ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். இதை சாலையில் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு நின்று கண்டு ரசித்தனர். கர்நாடகாவில் மைசூரு தசரா விழா உலக பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் பிரமாண்ட யானைகள் ஊர்வலம் நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று மைசூரு அரண்மனையில் இருந்து அபிமன்யு யானை மீது 750 கிலோ தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவியை சுமந்து முன் செல்ல மற்ற யானைகள் அதை பின்தொடர்ந்து ஊர்வலமாக சென்றன. இந்த ஊர்வலத்தை முதல்வர் சித்தராமையா மலர்தூவி தொடங்கிவைத்தார். இதில் ஆளுநர் தாவர்சந்த்கெலாட், மைசூரு மன்னர் யதுவீர கிருஷ்ண சாமராஜ உடையார் குடும்பத்தினர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யானைகள் ஊர்வலம் பன்னி மண்டபத்தை அடைந்த போது போலீசார் சார்பில் டார்ச் லைட் பரேட் நடத்தப்பட்டது. கடந்த 10 நாட்களாக மைசூரு மாநகரம் களை கட்டியிருந்தது. யானைகள் ஊர்வலத்துடன் தசரா விழா நிறைவடைந்தது.

The post உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா தங்க அம்பாரி ஊர்வலம் கோலாகலம்: முதல்வர் சித்தராமையா மலர்தூவி துவக்கிவைத்தார் appeared first on Dinakaran.

Tags : Mysore Dasara Festival ,Golden Ambari Procession Kolagalam ,Chief Minister ,Siddaramaiah Malardoovi ,Bangalore ,Vijayatasamy ,Dasara festival ,Karnataka ,Golden Ambari ,World Famous Mysore Dasara Festival ,Golden Ambari Procession Kolakalam ,Principal ,Chittaramaiah Malarduvi ,
× RELATED உழவர் பெருமக்களது வாழ்வுக்கும்...