×

செங்கம் அருகே 10 நாளில் மீண்டும் கோர விபத்து பஸ் – கார் மோதி 7 தொழிலாளர்கள் பலி: சுற்றுலா சென்று திரும்பியபோது சோகம்

செங்கம்: செங்கம் அருகே அரசு பஸ், கார் நேருக்குநேர் மோதியதில் 7 தொழிலாளர்கள் பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த 10 நாளுக்கு முன் நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியான நிலையில், மீண்டும் கோர விபத்து நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தனியார் கம்பெனியில் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் உட்பட 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு தொழிலாளர்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அதன்படி, கடந்த 22ம் தேதி அசாம் மாநிலத்தை சேர்ந்த ருக்குராய்(24), நாராயணா சேட்ஜி(35), விமல்(26), தாலு(28), நிக்காலாய்(30), ஒசூரை சேர்ந்த காமராஜ்(29) உட்பட 10 தொழிலாளர்கள் காரில் புறப்பட்டு சென்றனர். காரை தேன்கனிக்கோட்டையை சேர்ந்த புனித்குமார்(23) ஓட்டிச்சென்றார். புதுச்சேரிக்கு சென்றதும் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு அன்றிரவு அங்கேயே தங்கினர். நேற்று முன்தினம் மாலை மீண்டும் ஒசூருக்கு புறப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கிருஷ்ணா நகர் கூட்ரோடு வழியாக புதுச்சேரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார், இரவு 9 மணியளவில் அங்குள்ள வளைவை கடந்தபோது, எதிரே பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ் மீது நேருக்குநேர் மோதியது. இதில் காரின் முன்பக்கம் நொறுங்கியது. டிரைவர் புனித்குமார், தொழிலாளர்கள் காமராஜ், ருக்குராய், நாராயணா சேட்ஜி, விமல் ஆகிய 5 பேர் இடிபாடுகளில் சிக்கி அங்கேயே இறந்தனர். தகவலறிந்து மேல்செங்கம் போலீசார் மற்றும் செங்கம் தீயணைப்பு மீட்பு துறையினர் வந்து பொதுமக்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த தாலு, நிக்காலாய், டோலா, சுபான்(25), கிருஷ்ணப்பா(40), விக்காராய் ஆகிய 6 பேரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தாலு, நிக்காலாய் ஆகிய இருவரும் இறந்தனர். மற்ற 4 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இதுதொடர்பாக மேல்செங்கம் போலீசார் வழக்குப்பதிந்து தர்மபுரி மாவட்டம், மொரப்பூரை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் முனிரத்தினம்(42), மோட்டூரை சேர்ந்த கண்டக்டர் முருகன்(48) ஆகிய இருவரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக புதுச்சேரி- பெங்களூரு சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ், ேவலூர் சரக டிஐஜி முத்துசாமி, திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன், எம்எல்ஏ மு.பெ.கிரி உள்ளிட்டோர் நள்ளிரவே அங்கு வந்து விசாரணை நடத்தினர். ஏற்கனவே கடந்த 15ம் தேதி அமாவாசயையொட்டி குடும்பத்துடன் காரில் மேல்மலையனூர் கோயிலுக்கு சென்று திரும்பியவர்கள் செங்கம் அடுத்த பக்ரிபாளையம் அருகே லாரி மீது கார் மோதி 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தில் 7 பேர் பலியாகினர். அடுத்த 10 நாளில் மீண்டும் நடந்த கார் விபத்தில் 7 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* 6 மாதங்களில் 70 விபத்துகள் 40 பேர் பலி

புதுச்சேரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் பகுதியில் கடந்த சில மாதங்களாக விபத்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இரவு, பகல் என பாராமல் சிறு, சிறு விபத்துகளும் அதிகளவில் நடந்து வருகிறது. அதன்படி, கடந்த 6 மாதங்களில் 70க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது. இதில் 40 பேர் வரை பலியாகி உள்ளனர்.

The post செங்கம் அருகே 10 நாளில் மீண்டும் கோர விபத்து பஸ் – கார் மோதி 7 தொழிலாளர்கள் பலி: சுற்றுலா சென்று திரும்பியபோது சோகம் appeared first on Dinakaran.

Tags : Sengam ,Dinakaran ,
× RELATED இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்...