×

ஆட்சி மீது மக்கள் அதிருப்தி சிவராஜ்சிங் சவுகான் சறுக்குவாரா? சாதிப்பாரா?: மபியில் பகிரத முயற்சியில்

‘‘என்னைப் போன்ற ஒரு சகோதரன் உங்களுக்கு கிடைக்கவே மாட்டான். என்னை விட்டுவிட்டால் நீங்கள் நிச்சயம் வருத்தப்படுவீர்கள்’’ என, சாதனைப் பட்டியலை விட்டு விட்டு சகோதர பாசம் காட்டி வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார், மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் . புத்னி தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் மத்தியில் அவர் பேசிய வார்த்தைகள்தான் இவை. அடுத்ததாக, செகோர் மாவட்டத்தில் பேசிய அவர், ‘நான் தேர்தலில் போட்டியிட வேண்டுமா வேண்டாமா?’’ என்று கேள்வி எழுப்பினார். தேர்தலை கண்டு அஞ்சுகிற அளவுக்கு சவுகான் ஒன்றும் நேற்று அரசியலுக்கு வந்தவரல்ல. மத்திய பிரதேச முதல்வர் அரியணையில் தொடர்ந்து 13 ஆண்டுகள் வீற்றிருந்தவர் அவர். அதற்கு அடுத்து கடந்த தேர்தலில் வெற்றி பெற்று கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவருடைய ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் ஆட்சி கவிழ்ந்தது. அவர்கள் பாஜவில் சேர்ந்ததும், 230 இடங்களை கொண்ட பேரவையில் 107 எம்எல்ஏக்களை கொண்டிருந்த பாஜ, காங்கிரஸ் அதிருப்தியாளர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. சிவராஜ் சிங் சவுகான் முதல்வரானார்.

1950ம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மத்திய மாகாணம் மற்றும் பேரரில் இருந்து பிரித்து மத்திய பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டதும், முதன் முதலாக அந்த மாநில முதல்வராக இருந்தவர் ரவிசங்கர் சுக்லா. 1950 ஜனவரி 26ம் தேதி முதல்வராக பதிவயேற்றார். பின்னர் 1952ல் முதல் முறையாக தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 2 முறை முதல்வராக நீடித்தார். இவரைத் தொடர்ந்துபகவந்த் ராவ் மண்ட்லாய், கைலாஷ் கட்ஜூ, மீண்டும் பகவந்த் ராவ் மண்ட்லாய் , துவாரகா பிரசாத் மிஸ்ரா என 1967ம் ஆண்டு வரை இந்த மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை காங்கிரஸ் தன் வசம் வைத்திருந்தது. 1967ம் ஆண்டு தேர்தலில், வட மாநிலங்களில் இருந்த பாரதிய கிராந்தி தளம், சம்யுக்த சோஷலிச கட்சி, பிரஜா சோஷலிச கட்சி, ஜனசங்கம் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து உருவான சம்யுக்த வித்யாக் தள் கூட்டணி, காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது. கோவிந்த் நாராயண் சிங் முதல்வரானார்.

மீண்டும் 26 மார்ச் 1969 முதல் 30, ஏப்ரல் 1977 வரை காங்கிரஸ் ஆட்சி இருந்தது. சியாமா சரண் சுக்லா, பிரகாஷ் சந்திர சேத்தி ஆகியோர் முதல்வர்களாக இருந்தனர். பின்னர் ஆட்சி கலைக்கப்பட்டு, 54 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி நீடித்தது. பின்னர், 24 ஜூன் 1977ல் இருந்து 1980 வரை ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. கைலாஷ் சந்த்ர ஜோஷி, வீரேந்திர குமார் சக்லேசா, சுந்தர்லால் பட்வா ஆகியோர் முதல்வர்களாக இருந்தனர். அடுத்ததாக 1980ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று 9, ஜூன் 1980ல் ஆட்சி அமைத்தது. தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று 1990 வரை 10 ஆண்டுகளுக்கு ஆட்சியில் நீடித்தது. அர்ஜூன் சிங், மோதிலால் வோரா, சியாமா சரண் சுக்லா ஆகியோர் முதல்வர்களாக இருந்தனர். 1990 தேர்தலில் பாஜ வெற்றி பெற்று 2 ஆண்டு 285 நாட்கள் மட்டுமே நீடித்தது. பின்னர் ஆட்சி கலைக்கப்பட்டு ஓராண்டுக்கு ஜனாதிபதி ஆட்சி நீடித்தது. மீண்டும் 10 ஆண்டுகளுக்கு அதாவது, 1993, டிசம்பர் 7 முதல் 2003 வரை தொடர்ந்து 2 முறை காங்கிரஸ் வெற்றி பெற்று திக் விஜய் சிங் முதல்வரானார். மபியில் காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் இவர்தான்.

இதையடுத்து 2003, டிசம்பர் 8ல் முதன் முறையாக ஆட்சிக்கு வந்த பாஜ, ெதாடர்ந்து 3 தேர்தல்களில் பாஜ வெற்றி பெற்று ஹாட்ரிக் அடித்தது. இதில், உமா பாரதி, பாபுலால் கவுர் முதல்வர்களாக இருந்தனர். பின்னர் 13 ஆண்டுகள் முதல்வராக நீடித்தவர் சிவராஜ் சிங் சவுகான். திக் விஜய் சிங்கிற்கு பிறகு அதிக ஆண்டுகள் மபி முதல்வராக நீடித்து வருவதால், ஆளும் அரசுக்கு எதிரான அதிருப்தி மக்கள் மத்தியில் பரவலாகவே காணப்படுகிறது என்கின்றனர். கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் அதிருப்தி தலைவர்கள், கோஷ்டி மோதல் உள்ளிட்ட போராட்டங்களை கையாள வேண்டிய நிலையில் இருக்கிறார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய கருத்துக் கணிப்புகளும் பாஜ ஆட்சிக்கு சாதகமாக இல்லை. பாஜவுக்கும் காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அடுத்தடுத்த கணிப்புகள், கள நிலவரம் இதுதான் என நிரூபித்துள்ளன. இதனால் காங்கிரசுக்கு வெற்றி சுலபமாகி விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ள பாஜ, மக்கள் மத்தியில் அதிருப்தியை போக்க அனைத்து வகையிலும் பகிரத முயற்சி செய்து கொண்டிருக்கிறது. எனவேதான், பெண்கள் வாக்குகளை கவர சகோதர பாசத்தை கையிலெடுத்துள்ளார் சவுகான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 13 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள கட்சி தலைவருக்கு பட்டியலிட சாதனைகளே இல்லையா என்ற கேள்விதான் இங்கு எழுகிறது. இதனால், சவுகான் ஆட்சியில் கிடப்பில் போன திட்டங்கள், தேர்தலில் தோற்றாலும் மாற்றுக்கட்சிகளை உடைத்து தலைவர்களை இழுத்து ஆட்சி அமைக்கும் தந்திரங்களை அம்பலப்படுத்தி ஆவேசத்தோடு களமிறங்கியுள்ளார் காங்கிரஸ் தலைவர் கமல்நாத். சவுகானின் சகோதர பாசம் அவருக்கு மீண்டும் வாய்ப்பு தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

* தலைமையின் கையில் சவுகானின் லகான்

முந்தைய தேர்தல்களில் தனித்து நின்று தலைமைப் பொறுப்பேற்று சாதித்த சவுகானுக்கு தற்போது சோதனைக் காலம்தான். வேட்பாளர்கள் தேர்வு ஒரு புறம் இருக்கட்டும், அவரது தேர்தல் பிரசாரம் தொடங்கி அத்தனையும் தலைமையின் உத்தரவுப்படிதான் நடக்கிறது என்கின்றனர். முந்தைய தேர்தலில் ஜன் ஆசிர்வாத் யாத்திரையை தலைமையேற்று நடத்தியவர் இவர். இந்த முறை 5 யாத்திரைகள் நடக்கின்றன. அத்தனையிலும் தலைவர் ஆதரவு பிரசாரம் செய்யும்போது அருகில் நிற்கும் வேட்பாளர் போன்ற நிலைதான் சவுகானுக்கு இருக்கிறது என கூறப்படுகிறது.

* பலப்படுத்த இறங்கிய தலைவர்கள் பட்டாளம்

மக்கள் மத்தியில் உள்ள ஆளும் அரசுக்கு எதிரான அதிருப்தியை போக்க, ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பாகன் சிங் குலாஸ்தே, பிரகலாத் பாட்டீல், எம்பிக்கள் ரிதி பதக், ராகேஷ் சிங், ராவ் உதய் பிரதாப் சிங், ராகேஷ் சிங், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா ஆகியோரை களம் இறக்கியுள்ளது.

The post ஆட்சி மீது மக்கள் அதிருப்தி சிவராஜ்சிங் சவுகான் சறுக்குவாரா? சாதிப்பாரா?: மபியில் பகிரத முயற்சியில் appeared first on Dinakaran.

Tags : Shivraj Singh Chouhan ,Mabi ,Shivraj Singh Chauhan ,
× RELATED மபியில் இரவு 10 மணி தாண்டியதால் சவுகான்...