×

அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் கொலை வழக்கில் பழிக்கு பழியாக தீர்த்து கட்ட முடிவு செய்ததால் வெட்டி கொன்றோம்: கைதான வாலிபர்கள் வாக்கு மூலம்

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம்-பொன்மார் பிரதான சாலையில் உள்ள கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவி. முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், ரவியின் மனைவி கல்யாணி தற்போது ஊராட்சி மன்ற தலைவராக பதவி வருகிறார். 2வது மகன் அன்பரசு (29) காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக இளம் பாசறை ஒன்றிய செயலாளராகவும், 9வது வார்டு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார்.

மேலும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில், அன்பரசு கடந்த 21ம் தேதி இரவு கீரப்பாக்கம், துலுக்கானத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த திமுக கிளை செயலாளர் சேகர் (எ) தனசேகர் என்பவரின் 2வது மகன் நவீன்குமார் என்பவரின் மறைவை ஒட்டி படத்திறப்பு விழாவுக்காக சென்று விட்டு அவரது நண்பர்கள் 10 பேருடன் கீரப்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு சாலையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, இரவு 10.30 மணி அளவில் அங்கு மறைந்திருந்த ரவுடி கும்பல் கார் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.

இதில், 2 நாட்டு வெடி குண்டுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனை கண்டதும் மது அருந்தி கொண்டிருந்த அனைவரும் அலறி அடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர், அன்பரசுவை ரவுடி கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. இதுகுறித்த புகாரின்பேரில், காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ரவுடி கும்பலை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இது தொடர்பாக கீரப்பாக்கம், ஒத்திவாக்கம், நல்லம்பாக்கம், ஊத்துக்குழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இதில் உடனிருந்த நண்பர்கள் பிடிப்பட்ட தகவல் அறிந்ததும் கண்டிகை-வேங்கடமங்கலம் சாலை ஓரத்தில் உள்ள ஊத்துக்குழியில் குடியிருந்து வந்த ஒத்திவாக்கத்தை சேர்ந்த சுனில் (எ) சுதர்சன், கேளம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி ஆகிய இருவரும் மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரனிடம் 22ம் தேதி மாலை சரணடைந்தனர். பின்னர், சுனில் (எ) சுதர்சன் (20), பாலாஜி (20), கீரப்பாக்கம் துலுக்காணத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் பார்த்திபன் (21), நெடுங்குன்றம் சிவன் கோயில் தெருவை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவரின் மகன் ரத்தினம் என்ற நெடுங்குன்றம் ரத்தினம் (26) ஆகிய 4 பேரை காயார் போலீசார் கைது செய்து நேற்று முன்தினம் மாலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில், கொலை வழக்கில் கைதான வாலிபர்கள் குறித்து போலீசார் கூறுகையில், ‘வேங்கடமங்கலத்தை சேர்ந்த விஜய் (எ) பிஸ்டல் விஜய் என்பவரின் மாமாதான் அன்பரசு. விஜய் என்பவரின் நெருங்கிய நண்பரான நல்லம்பாக்கத்தை சேர்ந்த தேவாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி அழைத்து சென்று கஞ்சா போட்டி மற்றும் பள்ளி மாணவியுடன் தகராறு தொடர்பாக சுனில் (எ) சுதர்சன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து வெட்டி கொலை செய்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த சுனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். சுனிலை தீர்த்து கட்டுவதற்காக பிஸ்டல் விஜய் திட்டம் தீட்டியுள்ளார். இதில், முந்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக பிஸ்டல் விஜயை பலமுறை நோட்டமிட்டோம். இதற்கு அன்பரசு தடையாக இருந்து வந்தார். இதனால், பிஸ்டல் விஜய் சிக்கவில்லை. இதனையடுத்து, அவரது நண்பர்களின் உதவியுடன் அன்பரசுவை தீர்த்து கட்டினோம் என்று போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

மேலும், வாலிபர்கள் கூறிய வாக்குமூலம் உண்மைதானா? அல்லது ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதில் தப்பி ஓடிய முக்கிய குற்றவாளிகளையும் தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது. இதனால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் கொலை வழக்கில் பழிக்கு பழியாக தீர்த்து கட்ட முடிவு செய்ததால் வெட்டி கொன்றோம்: கைதான வாலிபர்கள் வாக்கு மூலம் appeared first on Dinakaran.

Tags : AIADMK panchayat council ,president ,Guduvancheri ,Ravi ,Gangai Amman Koil Street ,Venkatamangalam-Ponmar ,Vandalur ,Chengalpattu ,ADMK Panchayat Council ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...