×

மரப்பாச்சி பொம்மைகளில் அழகு ராஜமன்னார்!

நன்றி குங்குமம் தோழி

நவராத்திரி வந்துவிட்டாலே குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் குதூகலம்தான். காரணம், தாங்கள் நினைத்த வண்ணம் நினைத்த மாதிரி தெய்வங்களை அழகுப்படுத்தி பார்ப்பது என்பது இது போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே. வித்தியாசமான பொம்மை அலங்காரங்கள், தெய்வ ரூபங்கள் செய்யும் கலைஞர்களுக்கு நவராத்திரி என்றுமே ஸ்பெஷல்தான்.

அப்படி ஒரு கலைஞர்தான் சேலத்தை சேர்ந்த சுதா லட்சுமணன்.கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தான் கற்ற கலைகளை பயிற்சி அளித்தும் வரும் ஆர்டர்களுக்கு ஏற்ப செய்து தந்தும் கலைப் பிரியர்களிடம் நற்பெயர் பெற்று வருகிறார் இவர். இந்த நவராத்திரிக்கு இவர் கவனம் செலுத்தும் சிறப்பு என்ன? வாருங்கள் அவரிடமே பேசுவோம்.

உங்களைப் பற்றி..?

பிறந்த ஊர் திண்டுக்கல். திருமணம் முடிந்து வந்து வாழும் ஊர் சேலம். கணவர் லட்சுமணன் புகைப்படத்துறையில் வேலை பார்க்கிறார். மகள் ஆசிரியையாக இருக்கிறார். மகன்
என்னுடன் இணைந்து உணவு வகைகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

எப்படி வந்தது இந்தக் கலை ஆர்வம்?

பதிமூன்று வயதிருக்கும். ஒருமுறை திருவையாறு செல்ல நேர்ந்தது. அங்கு பலவித வண்ணங்களால் வழியெங்கும் போடப்பட்டிருந்த கோலங்கள் என் மனதில் பதிந்தது. அன்றிலிருந்து வண்ணங்கள் மீது கவனம் செலுத்த துவங்கினேன். மேலும் என் அம்மா அழகாக வண்ணக் கோலங்கள் போடுவார். எம்பிராய்டரியும் செய்வார். அவரைப் பார்த்துதான் எனக்கும் இந்த கலை மேல் ஆர்வம் ஏற்பட்டது.

அது மட்டுமில்லாமல், அதனை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது. நாங்க வசித்தது இருபது வீடுகள் கொண்ட தொகுப்பு வீடு. அதனால் விடுமுறை நாட்களில் முற்றத்தில் அமர்ந்து நாங்கள் உருவாக்கும் கலைப் பொருட்கள் பற்றிய விவாதங்கள் நடக்கும். நன்றாக இருந்தால் பாராட்டும் பாட்டிகளும், சரியில்லை என்றால் குட்டு வைக்கும் அத்தைகளுமே எங்கள் திறமையை மேலும் பிரகாசிக்க காரணம் எனலாம்.

எப்படா மார்கழி வரும் எங்கள் கோலத் திறமையை காட்டலாம் எனக் காத்திருப்போம். மார்கழி முதல் நாளில் இருந்து அந்த வாசலைக் கூட்டிப் பெருக்கி சாணம் தெளித்து பல வயதினர் சேர்ந்து போடும் வண்ணக் கோலங்களே நான் கற்ற முதல் கலை. அடுத்து களிமண் தந்து குட்டிக் குட்டி பொம்மைகள் செய்வது, கவுரி முகம் செய்வது எங்கள் சமூக விரதத்தின் கடமை என்பதால் அதனை நான் சிறுவயதிலேயே கற்றுக் கொண்டேன்.

பயிற்சியாளராக மாறியது குறித்து..?

ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய் வீட்டிலிருந்து கணவர் வீட்டுக்கு போகும்போது மாறுதல்களும் சேர்ந்தே வரும். எனக்கும் அப்படித்தான். என் அப்பா திண்டுக்கல் தியேட்டர் கேண்டீனை எடுத்து நடத்தியதால் முறுக்கு, அதிரசம் போன்ற ஸ்நாக்ஸ் வகைகளை உதவியாளருடன் செய்வதில் நேரம் இன்றி உழைத்து விட்டு இங்கு சேலம் வந்ததும் இரண்டு பிள்ளைகள் பிறந்து வளர்ந்ததும் நிறைய நேரம் கிடைத்தது.

நேரத்தை வீணாக்காமல் அந்த நேரங்களை பயன்படுத்தி பெயின்டிங், பொம்மை செய்வது, நகைகளை வடிவமைப்பது, ஆரி வேலைப்பாடு, தஞ்சாவூர் பெயின்டிங் போன்ற எல்லாக் கலைகளையும் அதில் சிறந்தவர்களிடம் சென்று கற்றேன். 2003ல் மத்திய அரசின் கைவினைப்பொருட்கள் அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்து பயிற்சிகள் தரத் துவங்கினேன். தனியார் பெயின்டிங் கம்பெனியின் ஆசிரியராகவும் இருக்கிறேன்.

கல்லூரிகளில் கிடைத்த வாய்ப்புகளை இன்று வரை பயன்படுத்தி பலருக்கும் பல கலைகளை கற்றுத் தந்து வருகிறேன். ஐந்து வயதுக் குழந்தை முதல் எந்த வயதினருக்கும் அவர்கள் விரும்பும் கலையை தனிப்பயிற்சியாகவும் கற்றுத்ருகிறேன்.

நவராத்திரியில் மரப்பாச்சி பொம்மைகளை அலங்காரம் செய்வது எப்படி?

நவராத்திரிக்கு வருடா வருடம் பலவிதமான பொம்மைகள் செய்து தருவேன். செட் பொம்மைகளே அதிகம் கேட்பார்கள். அதாவது திருமண செட். நலுங்கில் இருந்து மணப்பெண் தாய்மை அடைவது வரை அனைத்தையும் பொம்மைகளில் வடிவமைத்து தருகிறோம். மரப்பாச்சி என்பது மருத்துவ குணம் மிக்க மரத்தில் செய்யப்படும் குழந்தைகளுக்கான பழங்காலத்து விளையாட்டுப் பொருள். இந்த மரப்பாச்சிகள் ஒவ்வொரு வீட்டிலும் அன்று கட்டாயம் இருக்கும். இதை வாயில் வைத்துக் கடிக்கும் குழந்தைகளுக்கு இதன் மருத்துவ குணம் அதன் எச்சில் வழியாக கடக்கும் என்பதால் அன்று இதைத்தான் பெரும்பாலும் குழந்தைகளுக்கு விளையாடத் தருவார்கள். நவீனம் வந்ததில் நாம் மறந்து போனவற்றில் இந்த மரப்பாச்சிகளும் அடங்கும்.

அதைத் திரும்ப கொண்டு வரவே அதில் ஆபரணங்கள் கொண்டு பொண்ணு மாப்பிள்ளை, ராஜா ராணி, ராஜமன்னார், கோதை போன்றவற்றை செய்கிறோம். இவற்றை திருப்பதியில் இருந்து வாங்கி அதில் வாடிக்கையாளர் விரும்புவதைப் போல் கற்கள், மணிகள், பட்டாடைகள் என அலங்காரம் செய்து தருகிறோம். சிறிய அளவில் பெரிய அலங்காரங்கள் செய்ய முடியாது என்பதால் ஒரு அடியிலிருந்து செய்து தருகிறோம். நிறைய பேர் இதன் மகத்துவம் உணர்ந்து செய்து தரச்சொல்லி கேட்கிறார்கள்.

மரப்பாச்சி மட்டுமில்லாமல், திருமணங்களுக்கு மலர் அலங்காரம், சீர்த் தட்டுகள், பரிசுப் பொருட்கள் போன்றவைகளையும் செய்து தருகிறோம். மேலும் என் பிறந்த வீட்டின் தொழிலான தின்பண்டங்கள், பொடி, ஊறுகாய் வகைகளும் ஆரோக்கியத்துடன் சுகாதாரமாக செய்து வருகிறேன். பள்ளிக் கல்வி மட்டுமே முடித்திருந்தாலும் தான் கற்ற கைவினைக் கலையில் சிறந்து விளங்குகிறார் சுதா. இந்த நவராத்திரி கொலுவில் ராஜ அலங்காரத்தில் வீற்றிருக்கும் இவரது மரப்பாச்சி பொம்மைகளும் சேலம் பகுதிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

தொகுப்பு: சேலம் சுபா

The post மரப்பாச்சி பொம்மைகளில் அழகு ராஜமன்னார்! appeared first on Dinakaran.

Tags : Rajamannar ,Marapachi ,Navratri ,
× RELATED குப்பையுடன் தவறுதலாக வீசப்பட்ட ரூ.5...