×

தித்திக்கும் திருவில்லிபுத்தூர் பால்கோவா விலை உயர்ந்தாலும் விற்பனை குறையவில்லை

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் புவிசார் குறியீடு பெற்ற தித்திக்கும் பால்கோவா விலை கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது. இருப்பினும் விற்பனையில் குறையில்லாமல் எப்போதும் ஜோராக நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஆண்டாள் கோயில். அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருவது தித்திக்கும் பால்கோவாதான். மதுரைக்கு மல்லிகை, சங்கரன்கோவில் பிரியாணி, சாத்தூர் சேவு, திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு என்பது போல திருவில்லிபுத்தூருக்கு பால்கோவாவாகும்.

ஆண்டாள் நாச்சியார் அவதரித்த புண்ணிய பூமியில் வளரும் பசுக்களில் இருந்து பெறப்படும் பாலில் இருந்து தயாரிக்கப்படுவதால், மற்ற பகுதிகளில் தயாராகும் பால்கோவாவை விட, இங்கு தயாரிக்கப்படும் பால்கோவா சுவையானதாக இருக்கும். பால்கோவா மட்டுமல்லாமல் இங்கு தயாரிக்கப்படும் பால் அல்வா, கேரட் பால்கோவா, பால் பேடா, மோதி லட்டு, நெய் மைசூர்பா உள்ளிட்ட இனிப்பு வகைகளும் தனிச்சுவையுடன் இருக்கும். இதனால், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பொதுமக்கள் பால்கோவா உள்ளிட்ட இனிப்பு வகைகனை மறக்காமல் வாங்கிச் செல்கின்றனர். விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, கோவை, திருச்சி, சென்னை ஆகிய நகரங்களுக்கும், வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

விற்பனை உச்சத்தில்…
திருவில்லிபுத்தூரில் தயாராகும் பால்கோவாவின் விற்பனை, ஆண்டுக்கு நான்கு முறை உச்சத்தில் இருக்கும். இதன்படி, ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம், குற்றால சீசன், ஐயப்பன் கோயில் சீசன், புரட்டாசி சனி வார கிழமைகளின் போதும் பால்கோவா விற்பனை அதிகமாக இருக்கும். புரட்டாசி சனிவார விழா முடிந்து தற்போது தான் ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. தீபாவளியையொட்டி பால்கோவா விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில், பால்கோவா விலை கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது.

இதன்படி, கால் கிலோ பால்கோவா ரூ.80லிருந்து 85 ஆகவும், அரை கிலோ பால்கோவா ரூ.160லிருந்து 170 ஆகவும், ஒரு கிலோ பால்கோவா 320லிருந்து 340 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இதேபோல, பால் ஸ்வீட்ஸ்களின் விலை கிலோ ரூ.480லிருந்து ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து பல ஆண்டுகளாக பால்கோவா தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஒருவர் கூறுகையில், ‘சிலிண்டர் மற்றும் நெய் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களின் விலை உயர்வால், பால்கோவா விலை மற்றும் பால் ஸ்வீட்ஸ்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், விற்பனை குறையாமல் எப்போதும் போல ஜோராக உள்ளது’ என்றார்.

The post தித்திக்கும் திருவில்லிபுத்தூர் பால்கோவா விலை உயர்ந்தாலும் விற்பனை குறையவில்லை appeared first on Dinakaran.

Tags : Tithikkum Thiruvilliputhur ,Thiruvilliputhur ,Tiruvilliputhur ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு