×

மைசூருவில் 414வது ஆண்டு தசரா விழா கோலாகலம்; சாமுண்டீஸ்வரி ஊர்வலத்தை காண குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

கர்நாடகா: மைசூரு தசரா விழா உலகளவில் புகழ்பெற்று விளங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க தசரா விழா 413 ஆண்டுகளாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 414வது ஆண்டாக இந்தாண்டு தசரா விழா கடந்த 15ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதனால் மைசூரு நகரம் மற்றும் அரண்மனை முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இளைஞர் தசரா, உணவு மேளா, தசரா கண்காட்சி, மலர் கண்காட்சி திரைப்பட விழா, குழந்தைகள் தசரா உள்ளிட்டவை வழக்கமான கொண்டாட்டத்துடன் நடந்தது.

இதற்கிடையே மைசூரு அரண்மனையிலும் பாரம்பரியம், கலாசார முறைப்படி தசரா விழா மற்றும் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜைகளை அரண்மனை மன்னர் யதுவீர் தலைமையில் தொடங்கியது. தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நவராத்திரி விழா, தசரா விழாவையொட்டி மன்னர் யதுவீர் தர்பார் நடத்துவதற்காக தங்க, வைர, நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் ஜோடிக்கப்பட்டுள்ளது. அந்த சிம்மாசனத்துக்கு அரண்மனை முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு ராஜ உடையில் வீரநடைபோட்டு மன்னர் யதுவீர் தர்பாருக்கு வந்து சிம்மாசனத்தில் அமர்ந்து பூஜைகள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் இன்று மாலை நடைபெற உள்ள ஜம்பு சவாரி ஊர்வலத்திற்காக யானைகள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளியதும் தங்க அம்பாரியை சுமந்து கொண்டு அபிமன்யூ என்ற யானை தலைமையில் 14 யானைகள் மைசூரு நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக மண்டபம் வரை சென்றடையும். பின் விளையாட்டு மைதானத்தில் சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இதர நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த விழாவை காண மைசூருவில் லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். சிறப்பு பஸ்கள், ரயில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

The post மைசூருவில் 414வது ஆண்டு தசரா விழா கோலாகலம்; சாமுண்டீஸ்வரி ஊர்வலத்தை காண குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : 414th annual Dasara festival ,Mysore ,Kolagalam ,Samundiswari ,Karnataka ,Mysore Dasara Festival ,Dasara Festival ,Mysore Kolagalam ,
× RELATED தெப்பக்காடு பாலப்பணிகளை துரிதப்படுத்த கோரிக்கை