×

வணிக மனைகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பை உயர்த்த கூடாது: விக்கிரமராஜா கோரிக்கை

சென்னை: வணிக மனைகளுக்கு பத்திரபதிவில் அரசு வழிகாட்டு மதிப்பை உயர்த்த கூடாது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் குடியிருப்பு மனைகளின் அரசு மதிப்பீடு அண்மையில் அனைத்து பகுதிகளிலும், உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் வணிக பயன்பாட்டுக்கான மனைகளின் அரசு வழிகாட்டு மதிப்பீடு, சாதாரண குடியிருப்பு மனை மதிப்பீட்டிலிருந்து 3 மடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிட இருப்பதாக செய்திகள் மூலமாக தெரிய வருகின்றது. வணிகர்களும், வணிகமும் ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. ஆன்லைன் வர்த்தகம், தற்காலிக விழாக்கால கடைகள், மூலப்பொருள் விலை உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்வு, மின் கட்டணம், சொத்துவரி உயர்வு, பணப்புழக்கம் குறைவு என பல்வேறு காரணங்களால் தொழிலும், வணிகமும் நசிந்து வரும் நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த கால கட்டத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான மனைகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பு 3 மடங்கு உயர்த்துவதாக இருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும். இதனால் புதிதாக தொழில் தொடங்குவோர், புதிய வணிக நிறுவனர்கள் தொழிலுக்கு வருவதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, சொத்து பரிமாற்றத்திலும், மிகப்பெரும் மந்த நிலையை ஏற்படுத்தும். இதனால், வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கும். அரசுக்கான வரிவருவாய் குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். தமிழக முதல்வர் அவர்கள் இவற்றையெல்லாம் கவனத்தில்கொண்டு, வணிக மனைகளுக்கான அரசு வழிகாட்டு மதிப்பீட்டு உயர்வினை உடனடியாக மறுபரிசீலனை செய்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post வணிக மனைகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பை உயர்த்த கூடாது: விக்கிரமராஜா கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Wickramaraja ,Chennai ,Chief Minister of Trade Unions ,Vikramaraja ,Dinakaran ,
× RELATED சமாதான திட்டம் கால நீட்டிப்புக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்பு