×

முதுமலை புலிகள் காப்பகத்தில் சாலையோரங்களில் உலா வரும் வனவிலங்குகள்

*வனத்திற்குள் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி : முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் சாலையோரங்களில் உலா வரும் யானை உள்ளிட்ட வன விலங்குகளை வாகனங்களை நிறுத்தி சுற்றுலா பயணிகள் பார்வையிடுகின்றனர். இதனால் எதிர்பாராத சமயங்களில் வனவிலங்குகள் தாக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிமீ, பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 321 சதுர கிமீ, பரப்பளவு உள்மண்டல பகுதியாகும். இப்பகுதியில் தான் புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு, மான்கள், பறவையினங்கள் உள்ளிட்டவைகள் உள்ளன.
மேலும் உள் மண்டலம் வழியாகத்தான் மசினகுடி – தெப்பக்காடு இடையேயான சாலை மற்றும் தொரப்பள்ளி முதல் கக்கனல்லா வரையிலான சாலையும் செல்கிறது.

இதனால் இச்சாலை வழியாக பயணிக்கும்போது யானை, மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகளை அடிக்கடி காண முடியும். சில சமயங்களில் அரிதாக புலியை பார்க்க முடியும். வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் இச்சாலைகளில் பயணிக்கும்போது சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி இறங்கக்கூடாது. காப்பு காடுகளுக்குள் செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை செய்வதுடன், ஆங்காங்கு எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணி மேற்கொள்வது வாடிக்கை.

இந்நிலையில் தற்போது வனங்கள் பசுமையாக காட்சியளிக்கும் நிலையில் சாலையோரங்களில் யானை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருப்பதை காண முடியும். இதனால் மசினகுடி – தெப்பக்காடு மற்றும் தொரப்பள்ளி முதல் கக்கனல்லா சோதனைச்சாவடி வரையிலான சாலையோரங்களில் சுற்றுலா பயணிகள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளை பார்வையிடுகின்றனர்.

மேலும் வனங்களுக்குள் செல்வது போன்ற செயல்கள் நடப்பதை காண முடிகிறது. இதனால் வனவிலங்குகள் தாக்கக்கூடிய அபாயமும் நீடிக்கிறது. எனவே வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டு சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி வனத்திற்குள் நுழைவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post முதுமலை புலிகள் காப்பகத்தில் சாலையோரங்களில் உலா வரும் வனவிலங்குகள் appeared first on Dinakaran.

Tags : Mudumalai Tiger Reserve ,Ooty ,Muthumalai Tiger Reserve ,Dinakaran ,
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளின் தாகம் தீர்த்த மழை