×

பாலக்கோடு அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தையால் மக்கள் பீதி

*கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பஞ்சப்பள்ளி அருகேயுள்ள சாமனூர் கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வனப்பகுதி அருகே உள்ளதால், உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி கிராமத்துக்குள் வந்து செல்கின்றன. அவ்வாறு வரும் விலங்குகள் ஆடு- கோழி உள்ளிட்ட கால்நடைகளை தூக்கிச் செல்வதும் உண்டு.

இந்நிலையில், வனத்தில் இருந்து வெளியே வந்த சிறுத்தை ஒன்று, ஊக்குள் புகுந்து விட்டதாக தகவல் பரவியது. இதனால், பீதிக்குள்ளான மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதுகுறித்த தகவலின்பேரில், வனச்சரகர் நடராஜன் மற்றும் வனத்துறையினர் சாமனூர் கிராமத்துக்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர்.

மேலும், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் இடத்தை பார்வையிட்டனர். இதில், அதிகாலை வேளையில் ஜனப்பனூர் மலைப்பகுதிக்கு சிறுத்தை வந்து சென்றது தெரிந்தது. தொடர்ந்து மலை உச்சியில் அமர்ந்திருந்த சிறுத்தையை, செல்போனில் சிலர் படம் எடுத்துள்ளனர். இந்த காட்சி வைரலானது. இதையடுத்து, சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதற்கிடையே, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக உயரதிகாரிகளிடம் பேசி கூண்டு கேட்டுள்ளதாக தெரிவித்தனர். சிறுத்தை நடமாட்டம் குறித்து கொக்கிக்கல், படகாண்டஅள்ளி, ஜனப்பனூர் உள்ளிட்ட வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில், வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுகுறித்து வனச்சரக அலுவலர் நடராஜ் கூறுகையில், ‘கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியில் தனியாக செல்ல வேண்டாம். வனப்பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்,’ என்றார்.

The post பாலக்கோடு அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தையால் மக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Palakode ,Dharmapuri ,Dharmapuri district ,Chamanur ,Panchapalli, Palakodu ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்