×

விஜயதசமியில் கண்ணீர்விடும் பக்தர்கள்..!!

ஜம்முவில் மகாசரஸ்வதி

ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டினாற்போல் ராம்பன் அருகில் ‘கரோல்’ என்னும் சிறு கிராமத்தில் தென்னிந்திய பாணியில் ‘‘ஸ்ரீமகா சரஸ்வதி கோயில்’’ கட்டப் பட்டுள்ளது. சாலையை அடுத்து சற்று உயரமான இடத்தில் ஒருபுறம் உயர்ந்த மலையும், மற்றொருபுறம் சிறிய நீர்வீழ்ச்சியுடன் கூடிய ஓடையும் சந்திரமகா நதியுமாக மிக ரம்மியமான இடத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

ஒரு சிலை மூன்று தேவியர்

கேரள மாநிலம், ஆலப்புழை அருகேயுள்ள ‘‘தலைவடி’’ என்ற கிராமத்தில் பனையார்காவு தேவி கோயில் இருக்கிறது. இங்குள்ள தேவி மேற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். தேவி காலை வேளையில் சரஸ்வதியாகவும், உச்சி காலம் பூஜை வரை மகாலட்சுமியாகவும், அதன் பிறகு பத்ரகாளியாகவும் பூஜிக்கப்படுகிறாள். இந்தத் திருவுருவத்தை வசிஷ்டர் பிரதிஷ்டை செய்ததாக கூறுகிறார்கள். ராமரும், லட்சுமணரும் இந்தத் தேவியை திரபுரசுந்தரியாக வழிபட்டிருக்கிறார்கள்.

மூன்று முக துர்க்கை

கும்பகோணம் அம்மா சத்திரம் என்ற திருத்தலத்தில் அமைந்துள்ளது சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோயில் இறைவன்: சப்தரிஷீஸ்வரர். அம்பிகை: ஞானாம்பிகை. பொதுவாக ‘ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்’ என்று இறைவனின் திருநாமம் இருக்கும் தலங்களில் மட்டுமே ஞானாம்பிகை எழுந்தருளியிருப்பாள். இத்தலத்திலும் கல்விக்கு அதிபதியான இந்த அம்பிகை அருள்புரிவது தனிச்சிறப்பு எனப்படுகிறது. மேலும், இத்தல சுவாமி சந்நதியின் கோஷ்டத்தில் ‘மூன்று முக விஷ்ணு துர்க்கை’ எழுந்தருளியுள்ளாள்.

கையில் சங்கு சக்கரத்துடன் பல தலங்களில் ஒருமுகத்துடன் காட்சி தரும் துர்க்கை, இங்கு முப்பெருந்தேவியின் அம்சமாக எழுந்தருளியிருப்பது மிகவும் போற்றப்படுகிறது. இதேபோல் மூன்றுமுக துர்க்கையை தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் ராஜகம்பீர மண்டபத்தில் தரிசிக்கலாம். எட்டு கரங்களுடன் காட்சி தரும் இந்த துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, மகேஸ்வரி என்ற
முப்பெரும் தெய்வங்கள் இணைந்தது என்று போற்றப்படுகிறது.

விஜயதசமியில் கண்ணீர்விடும் பக்தர்கள்

மேற்கு வங்காளத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு களிமண்ணால் செய்யப்பட்ட துர்க்கை காளி விக்கிரகங்களை வைத்து வழிபடுவது வழக்கம். விஜயதசமி அன்று மண்ணால் செய்யப்பட்ட திருவுருவங்களான துர்க்கை, காளி ஆகிய சிலைகள் கடலில் கரைத்து விடுவார்கள். அப்போது பக்தர்கள் காளியின் பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுவதுண்டு.

சயன துர்க்கை

பெரும்பாலும் வடக்கு திசை நோக்கி அருள்புரியும் துர்க்கை, பட்டுக்கோட்டை பாலத்துளி துர்க்கை அம்மன் ஆலயத்தில் மேற்கு திசை நோக்கி நான்கு கரங்களுடன் விஷ்ணுதுர்க்கை எழுந்தருளியுள்ளாள். இந்தத் துர்க்கையின் பாதத்தின்கீழ் ‘சயன துர்க்கை’யும் அருள்புரிவதைத் தரிசிக்கலாம். இருதுர்க்கைகள் உள்ளது. வேறு எந்த ஆலயங்களிலும் இல்லை என்று கூறப்படுகிறது.

தொகுப்பு: எஸ். விஜயலட்சுமி

The post விஜயதசமியில் கண்ணீர்விடும் பக்தர்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Vijayadashami ,Mahasaraswati ,Jammu ,Ramban ,Srinagar ,
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...