×

வடமதுரை அருகே ரயில்வே சுரங்கப்பாதை விரைவில் பயன்பாட்டிற்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

 

வடமதுரை, அக். 23: திண்டுக்கல் – திருச்சி 4 வழிச்சாலையில் வடமதுரை அருகே, வலதுபுறத்தில் வேல்வார்கோட்டை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் திண்டுக்கல்-திருச்சி-சென்னை மார்க்கமாக செல்லும் இருவழி ரயில் பாதைகள் குறுக்கிடுகின்றன. இந்த ரயில் பாதைகளின் இருமார்க்கத்திலும் தினமும் 50க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் செல்கின்றன. இதனால் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது.

இதனால் வேல்வார்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ரயில்வே கேட்டை கடந்து செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதனால் இப்பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையையேற்று சில மாதங்களுக்கு முன்பு ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் ரயில் பாதையின் கீழ்ப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. ஆனால் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் மிதமான வேகத்தில் நடந்து வருகின்றன. இதனால் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்டதூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, சுரங்கப்பாதை அமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

The post வடமதுரை அருகே ரயில்வே சுரங்கப்பாதை விரைவில் பயன்பாட்டிற்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Vadamadurai ,Dindigul – Trichy 4 route ,Velwarkottai ,Dinakaran ,
× RELATED வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையோரம்...