×

தென் திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் நவராத்திரி பிரம்மோற்சவ திருத்தேரோட்டம்

 

மேட்டுப்பாளையம், அக்.23: மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான தென் திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், நடப்பாண்டின் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி துவங்கியது. தொடர்ந்து கிருஷ்ணர், ராதை, சரஸ்வதி, லட்சுமி உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்ட கொலு அமைத்து வழிபாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து நாள் தோறும் எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. மேலும், மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் தொடர்ந்து சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்ம வாகனம், கல்ப விருக்‌ஷ வாகனம், சர்வ பூபால வாகனங்களில் தினந்தோறும் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். இந்நிலையில், நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.

இதற்காக அதிகாலை முதலே மலையப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும் நடைபெற்று ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் திருத்தேரில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க வேத மந்திரங்கள், மேள தாளங்கள் முழங்க திருக்கோவிலின் நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்து இறுதியாக நிலையை அடைந்தார். இந்நிகழ்ச்சியில், அன்னூர் கே.கோவிந்தசாமி குடும்பத்தினர், கேஜி நிறுவன ஊழியர்கள், பணியாளர்கள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தென் திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் நவராத்திரி பிரம்மோற்சவ திருத்தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Navratri Brahmotsava ,South Tirupati Tirumala Srivari Temple ,Mettupalayam ,South Tirupati Tirumala ,Jadayampalayam ,Navratri Brahmotsava Tirutherottam ,
× RELATED மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 4 நாளுக்கு பின்னர் மலை ரயில் சேவை துவங்கியது