×

மயிலாடும்பாறை அருகே மூடப்படாத பள்ளங்களால் ஆபத்து

வருசநாடு, அக். 23: மயிலாடும்பாறையில் குடிநீர் குழாய்களை சீரமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மயிலாடும்பாறை கிராமத்தில் மூல வைகையாற்றில் உறை கிணறு அமைத்து பொன்னன்படுகை, குமணன்தொழு ஆகிய ஊராட்சிகளுக்கு குடிநீர் எடுத்து செல்லப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சில இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வந்தது. இதனைச் சீரமைப்பதற்காக பொன்னன்படுகை- மயிலாடும்பாறை இடையே சாலையோரம் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டன.

சில நாட்களில் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது வரை சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படவில்லை. பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் சாலையோரம் மண் குவித்து வைக்கப்பட்டு இருப்பதால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் பைக் விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பெரிய அளவிலான விபத்துகள் நடைபெறும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோர பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மயிலாடும்பாறை அருகே மூடப்படாத பள்ளங்களால் ஆபத்து appeared first on Dinakaran.

Tags : Mayilatumparai ,Varusanadu ,Mayiladumparai ,Dinakaran ,
× RELATED தரைப்பாலத்தை பராமரிக்க கோரிக்கை