×

அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்பும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க சட்ட நடவடிக்கை: அமைச்சர் தகவல்

சென்னை: அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்பும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை ஓரிரு நாளில் எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை மந்தைவெளி பகுதியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி காவேரி தனியார் மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, திமுக விளையாட்டு அணி துணைச் செயலாளர் நிவேதா ஜெசிக்கா மற்றும் காவேரி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் மகேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: மருத்துவப் படிப்பில் 15% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாகவும், 85% மாநில ஒதுக்கீட்டு இடங்களாகவும் உள்ளது. இதில் கடந்த ஆண்டு, அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 6 இடங்கள் காலியாக இருந்தது. இந்தாண்டு 83 இடங்கள் காலியாக உள்ளது. இதனால், கடந்த வாரம் தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. அதனால், முதல்வர் அறிவுறுத்தல் படி ஏற்கனவே தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களை தமிழ்நாடு அரசே நிரப்பிக் கொள்ள அனுமதிக்கும் படி நாளையோ அல்லது நாளை மறுதினமோ சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

The post அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்பும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க சட்ட நடவடிக்கை: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Chennai ,Dinakaran ,
× RELATED தேர்தல் வெளிப்படை தன்மையுடன் நடப்பது...