×

ரச்சின் 75, டேரில் மிட்செல் 130 நியூசிலாந்து 273 ரன் குவிப்பு

தர்மசாலா: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், இந்திய அணியுடனான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து 273 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணியின் ரச்சின் ரவிந்த்ரா 75 ரன், டேரில் மிட்செல் 130 ரன் விளாச, இந்திய வேகம் முகமது ஷமி 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். காயத்தால் அவதிப்படும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ், வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூருக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டனர்.

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முழுமையாகக் குணமடையாததால் இந்த போட்டியிலும் அவர் களமிறங்கவில்லை. டாம் லாதம் தலைமை பொறுப்பு வகித்தார். கான்வே, வில் யங் இணைந்து நியூசிலாந்து இன்னிங்சை தொடங்கினர். கான்வே 9 பந்தை சந்தித்து சிராஜ் வேகத்தில் டக் அவுட்டானார். யங் 17 ரன் எடுத்து ஷமி பந்துவீச்சில் கிளீன் போல்டாக, நியூசி. 8.1 ஓவரில் 19 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ரச்சின் ரவிந்த்ரா – டேரில் மிட்செல் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர்.

இவர்களைப் பிரிக்க இந்திய வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. சில கேட்ச் வாய்ப்புகளையும் இந்தியா வீணடித்தது குறிப்பிடத்தக்கது. ரச்சின் – டேரில் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 159 ரன் சேர்த்தது. ரச்சின் 75 ரன் (87 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஷமி வேகத்தில் கில் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரு முனையில் டேரில் மிட்செல் அதிரடியைத் தொடர… கேப்டன் லாதம் 5 ரன், கிளென் பிலிப்ஸ் 23 ரன் எடுத்து குல்தீப் சுழலில் பலியாகினர். அபாரமாக விளையாடிய மிட்செல் சதம் விளாச, மார்க் சாப்மேன் 6 ரன் எடுத்து பும்ரா பந்துவீச்சில் கோஹ்லி வசம் பிடிபட்டார்.

மிட்செல் சான்ட்னர் (1 ரன்), மேத்யூ ஹென்றி (0) இருவரும் ஷமி வேகத்தில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். மிட்செல் 130 ரன் (127 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஷமி பந்துவீச்சில் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி பந்தில் பெர்குசன் (1) ரன் அவுட்டாக, நியூசிலாந்து 50 ஓவரில் 273 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இந்திய பந்துவீச்சில் ஷமி 10 ஓவரில் 54 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். குல்தீப் 2, பும்ரா, சிராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 274 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. கேப்டன் ரோகித், கில் இணைந்து துரத்தலை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11 ஓவரில் 71 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தது. ரோகித் 46 ரன் (40 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), கில் 26 ரன் எடுத்து பெர்குசன் பந்துவீச்சில் அவுட்டாகினர். இந்தியா 15.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்திருந்தபோது பனிமூட்டம் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

The post ரச்சின் 75, டேரில் மிட்செல் 130 நியூசிலாந்து 273 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rachin ,Daryl Mitchell ,New Zealand ,Dharamsala ,ICC World Cup ODI ,Dinakaran ,
× RELATED 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை...