×

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் பாஜ முதல் பட்டியல் வெளியீடு: முதல்வர் சந்திரசேகரராவை எதிர்க்கும் வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுடெல்லி: தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் நேற்று வெளியானது. அதில் 3 எம்.பிக்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. தெலங்கானாவில் உள்ள 119 சட்டபேரவை தொகுதிக்கும் அடுத்த மாதம் நவம்பர் 30ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. தற்போது அங்கு ஆட்சியில் உள்ள முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான பி.எஸ்.ஆர் கட்சிக்கு, காங்கிரஸ், பா.ஜ கட்சிகள் கடும் சவால் அளிக்கின்றன. நேற்று 52 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை பாஜ வெளியிட்டது.

தெலங்கானாவில் பாஜவுக்கு 4 எம்.பிக்கள் உள்ளனர். அவர்களில் மூவர் பெயர் முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பா.ஜ எம்பிக்களில் கரீம் நகர் தொகுதியில் பண்டி சஞ்சய் குமாரும், போத் தொகுதியில் சோயம் பாபு ராவும், கோரட்லா தொகுதியில் தர்மபுரி அரவிந்த் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். மாநில பாஜ தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஜி. கிஷன் ரெட்டி பெயர் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. ஹுசுராபாத் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏவும், தெலங்கானா பா.ஜ தேர்தல் கமிட்டித் தலைவருமான எடலா ராஜேந்தர் நிறுத்தப்பட்டுள்ளார்.

அதே போல் முதல்வர் கேசிஆர் போட்டியிடும் கஜ்வெல் தொகுதியிலும் எடலா ராஜேந்தர் நிறுத்தப்பட்டுள்ளார். கேசிஆர் போட்டியிடும் இன்னொரு தொகுதியான காமரெட்டி தொகுதியில் பா.ஜ சார்பில் கே. வெங்கட ரமண ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். கேசிஆர் மகனும், அமைச்சருமான கே.டி. ராமராவுக்கு எதிராக சிர்சில்லா தொகுதியில் ராணி ருத்ரமா ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜ வெளியிட்ட 52 பேர் கொண்ட பட்டியலில் 12 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

* சஸ்பெண்ட் எம்எல்ஏவுக்கு மீண்டும் சீட்
தெலங்கானவில் கோஷாமகால் தொகுதி எம்எல்ஏ.வான ராஜா சிங், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இஸ்லாம் மற்றும் முகமது நபி குறித்த சர்ச்சை வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதைத் தொடர்ந்து தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் நவம்பர் மாதம் தெலங்கானா உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கோரிய பாஜ தலைமை அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், அவரது விளக்கத்தை ஏற்று அவர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறுவதாக அம்மாநில பாஜ பொறுப்பாளர் கிஷண் ரெட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* பா.ஜவின் பி டீம் இல்லை
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், எம்எல்சி.யுமான கவிதா அளித்த பேட்டியில், “தெலங்கானா மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். நாங்களும் அவர்களுடன் உள்ளோம். இதனால் 100 சதவீதம் தெலங்கானாவில் 95-100 சீட்களுடன் பிஆர்எஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். இதற்கு முன்பு நாட்டில் உள்ள எந்த மாநிலமும் நினைத்து பார்க்காத திட்டங்களை எங்கள் அரசு நடைமுறையில் செயல்படுத்தி உள்ளது. பிஆர்எஸ் மாநிலத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. பிஆர்எஸ், பாஜ.வின் பி டீம் அல்ல” என்று கூறினார்.

The post தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் பாஜ முதல் பட்டியல் வெளியீடு: முதல்வர் சந்திரசேகரராவை எதிர்க்கும் வேட்பாளர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana Assembly Elections ,Chief Minister ,Chandrasekharara ,New Delhi ,BJP ,Telangana ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...