×

6 மாதத்துக்கு முன் நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக தொழிலாளி தலை துண்டித்து படுகொலை: உறவினர்கள் 2 பேரிடம் விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி டிஎம்பி காலனி சலவைக்கூடத்தில் நேற்று காலை ரத்தக்கறையுடன் ஒரு பை கிடந்தது. தகவலறிந்து தூத்துக்குடி டவுன் போலீசார் சென்று பார்த்த போது அந்த பையில் வாலிபர் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலை இருந்தது. அதிர்ச்சி அடைந்த போலீசார் வேறு எங்காவது உடல் கிடக்கிறதா என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் அருகே இருந்த மையவாடியில் வாலிபரின் தலையற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிந்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலையானவர் தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி மாரியப்பன் (43) என்பது தெரியவந்தது.

இவர் கடந்த ஏப். 23ம் தேதி இதே சலவைக்கூடத்தில் நண்பரான அண்ணாநகர் முதல் தெருவைச் சேர்ந்த சப்பாணிமுத்துவுடன் (42) மது அருந்தும்போது, தாய் குறித்து அவதூறாகப் பேசியதால் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் அங்கேயே தூங்கினர். நள்ளிரவில் எழுந்த மாரியப்பன் கல்லை எடுத்து சப்பாணிமுத்து தலையில் போட்டு கொலை செய்துவிட்டு மறுநாள் தென்பாகம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இவ்வழக்கில் கைதாகி சிறை சென்றவர் சமீபத்தில்தான் ஜாமீனில் வெளிவந்தார்.

சப்பாணிமுத்துவின் கொலைக்குப் பழிக்குப்பழியாக அவரது உறவினர்கள் நேற்று காலை மாரியப்பன் மையவாடி பகுதியில் வந்த போது அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். பின்னர் தலையை தனியாக துண்டித்து எடுத்துவந்து சப்பாணிமுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த சலவைகூடத்தில் போட்டு சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக சப்பாணிமுத்துவின் உறவினர் உள்ளிட்ட இருவரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 6 மாதத்துக்கு முன் நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக தொழிலாளி தலை துண்டித்து படுகொலை: உறவினர்கள் 2 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,TMP Colony ,Dinakaran ,
× RELATED மீளவிட்டான் சாலை விரிவாக்கப் பணி