×

சென்னை வர்த்தக மையத்தில் ரூ.308.75 கோடியில் விரிவாக்க திட்டப்பணி: தலைமை செயலாளர் ஆய்வு

சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் ரூ.308.75 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கண்காட்சி மற்றும் மாநாட்டு அரங்க கட்டுமான பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தால் ரூ.308.75 கோடி மதிப்பில் விரிவாக்க திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, 9,00,000 சதுர அடி பரப்பளவில் 4000 பேர்கள் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம் மற்றும் 5 பொருட்காட்சி அரங்கங்கள், 1300 வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்ட பன்னடுக்கு வாகன நிறுத்தம், வடிகால் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வேலையாட்களின் எண்ணிக்கையை அதிகரித்து திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் கிண்டி தொழிற்பேட்டை சிட்கோ சாலையில் ரூ.3.47 கோடி மதிப்பில் 360 மீட்டர் நீளத்திற்கும், ஈக்காட்டுத்தாங்கலில் ரூ.5.50 கோடி மதிப்பில் 556 மீட்டர் நீளத்திற்கும், அரும்பாக்கம் பகுதியில் ரூ.5.80 கோடி மதிப்பில் 660 மீட்டர் நீளத்திற்கும், அண்ணாசாலை டி.எம்.எஸ். சந்திப்பில் ரூ.2.77 கோடி மதிப்பில் 315 மீட்டர் நீளத்திற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் பார்வையிட்டு விரைவில் முடிக்க உத்தரவிட்டார்.

அதேபோன்று சென்னை மாநகராட்சி சார்பில் காந்தி இர்வின் சாலை சந்திப்பு, நீர்வளத்துறை சார்பில் விருகம்பாக்கம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அம்பேத்கர் சாலையில் ஓட்டேரி நல்லா கால்வாயில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணியினையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் வினய் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post சென்னை வர்த்தக மையத்தில் ரூ.308.75 கோடியில் விரிவாக்க திட்டப்பணி: தலைமை செயலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chennai Trade Center ,Chennai ,Chief Secretary ,Dinakaran ,
× RELATED சென்னை வர்த்தக மையத்தில்...