×

கனடா தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்ற விவகாரம் இந்தியாவுக்கு அமெரிக்கா இங்கிலாந்து எதிர்ப்பு

வாஷிங்டன்: கனட தூதரக அதிகாரிகள் திரும்ப பெற்றது குறித்து இந்தியாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜுன் 18ம் தேதி கனடாவில் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதால் இருநாட்டு உறவுகள் மோசம் அடைந்துள்ளன. இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 62 பேரில் 41 பேரை திரும்ப பெற இந்தியா விதித்த கெடு முடிவடைந்த நிலையில், 41 தூதரக அதிகாரிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் கனடா திரும்ப பெற்றது.

இதுகுறித்து அமெரிக்க வௌியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், “இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் திரும்ப பெறப்பட்டது கவலை அளிக்கிறது. பிரச்னைகளுக்கு தீர்வு காண களத்தில் தூதரக அதிகாரிகள் இருப்பது மிகவும் அவசியம். நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி இந்தியாவை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். மேலும், கனடா தூதரக பணிகளுக்காக அங்கீகாரம் பெற்ற அதிகாரிகளின் சலுகைகள் மற்றும் விலக்குகள் உள்பட 1961ம் ஆண்டு வியன்னா மாநாட்டு ஒப்பந்தத்தின்படி தூதரக உறவுகளுக்கான கடமையை இந்தியா நிறைவேற்றும் என அமெரிக்கா நம்புகிறது” என்று கூறியுள்ளார்.

கனடா தூதரக அதிகாரிகள் வௌியேற்றம் குறித்து இங்கிலாந்தும் வேதனை வௌியிட்டுள்ளது. “கனடா நாட்டு தூதரக அதிகாரிகளை வௌியேற்றும் இந்தியாவின் முடிவு ஏற்க தக்கதல்ல என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது. தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் சலுகைகளை விலக்கி கொள்வது என்பது வியன்னா மாநாட்டு கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளுடன் ஒத்து போகவில்லை” என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

* கனடா பிரதமர் கவலை
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில்,’ கனடா மற்றும் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு நம்ப முடியாத அளவுக்கு கடினமாக்குகிறது. தூதரக அடிப்படை கொள்கை விதிகளை மீறி இந்தியா இவ்வாறு செய்கிறது. இது இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கனடா குடிமக்களின் நலன் மற்றும் மகிழ்ச்சியை பாதிக்கும் என்பதால் நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன். தூதர்களை வெளியேற்றியது கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்தார்.

The post கனடா தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்ற விவகாரம் இந்தியாவுக்கு அமெரிக்கா இங்கிலாந்து எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Canada ,US ,India ,Washington ,United States ,United Kingdom ,America ,England ,
× RELATED இந்திய மாணவர் சுட்டு கொலை: கனடாவில் பயங்கரம்