×

முதல்வர் கடிதம் கொடுத்து 14 நாளுக்குப்பின் அமைச்சர் சந்திரபிரியங்கா டிஸ்மிஸ்; ஜனாதிபதி ஒப்புதல்: அரசிதழில் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா பதவி நீக்கம் குறித்து, கவர்னரிடம் முதல்வர் பரிந்துரை கடிதம் கொடுத்த 14 நாட்களுக்குப்பின் ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததாக கூறி நேற்று அரசாணை, அரசிதழில் வெளியிடப்பட்டது. புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் சந்திரபிரியங்கா, காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தனித்தொகுதியில் போட்டியிட்டு தேர்வானவர். தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னையில் எழுந்த புகாரில் கண்டித்தும் மாறாததால், அமைச்சர் பணியை சரிவர செய்யவில்லை என்று கூறி அவரை டிஸ்மிஸ் செய்து கடந்த 8ம் தேதி முதல்வர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் பரிந்துரை கடிதம் கொடுத்தார்.

இந்த விஷயம் வெளியே கசிந்ததால் 10ம் தேதி துணை நிலை ஆளுநர் மற்றும் முதல்வருக்கு தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து சந்திரபிரியங்கா கடிதம் அனுப்பினார். அதில் சாதி, பாலின ரீதியிலான தாக்குதலுக்கு தான் உள்ளானதாகவும், தனிப்பட்ட பிரச்னைகளை வைத்து தன்னைச்சுற்றி சதி வலை பின்னப்படுகிறது. இனிமேலும் ஆணாதிக்க சக்திகளுக்கு எதிராக தன்னால் போராட முடியாது என்பதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார்.
சந்திரபிரியங்காவின் இந்த குற்றச்சாட்டு ஆளும் அரசை கடுமையாக உலுக்கியது.

எதிர்க்கட்சிகள் இப்பிரச்னையை கையில் எடுத்துக்கொண்டு, சந்திரபிரியங்காவின் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். அவருடைய அமைச்சர் பதவி நீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும், என தெரிவித்தனர். மேலும் பெண் அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பொறுப்பேற்று ரங்கசாமி பதவி விலக வேண்டுமென முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தினார். இதற்கிடையே ரங்கசாமி டிஸ்மிஸ் கடிதம் அனுப்பி பல நாட்களை கடந்தும் குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைக்கவில்லை.

உள்துறை அமைச்சகம் வழியாக குடியரசு தலைவர் டிஸ்மிஸ் கோப்பு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உரிய சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளதால் ஒப்புதலுக்கு காலதாமதம் ஆவதாக துணை நிலை ஆளுநர் தெரிவித்திருந்தார். சில மணி நேரங்களில் கிடைக்க வேண்டிய அனுமதிக்கு, நாட்கள் கணக்கில் இழுத்தடித்ததால் புதுச்சேரி அரசியலில் குழப்பமான சூழல் நிலவியது. முதல்வர் முடிவு உடனே ஏற்கப்படாததால் இழுபறி நீடித்து வந்தது. பாஜ அமைச்சர்களுக்கான இலாகாவை மாற்றியமைப்பதற்கு திட்டமிட்டுள்ள பாஜ, டிஸ்மிஸ் கடிதத்துக்கு உடனே ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்வதாக கூறப்பட்டது.

மேலும் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், உடனடியாக டிஸ்மிஸ் செய்வதை தடுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. தனக்கு வேண்டப்பட்ட பாஜவின் அமைச்சருக்கு முக்கிய இலாகாவை பெறுவதற்காக பாஜ திட்டமிட்டு தடுப்பதாகவும் தகவல் வெளியானது.இதைதொடர்ந்து என்.ஆர் காங்கிரசை உடைக்க பாஜ திட்டமிட்டுள்ளதாகவும், கூட்டணி முறிவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் நேற்று மாலை 14 நாட்களுக்கு பிறகு சந்திரபிரியங்காவின் டிஸ்மிஸ்சை ஏற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இதுபற்றி ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் வழியாக புதுவை அரசுக்கு கடிதம் அனுப்பியது. இதனை தொடர்ந்து, முதல்வரின் பரிந்துரையை ஏற்று, தற்போதுள்ள அமைச்சரவையில் இருந்து சந்திரபிரியங்கா உடனடியாக நீக்கம் செய்யப்படுவதற்கான குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கப்பட்ட அரசு ஆணை புதுச்சேரி அரசிதழில் நேற்று வெளியிடப்பட்டது.

The post முதல்வர் கடிதம் கொடுத்து 14 நாளுக்குப்பின் அமைச்சர் சந்திரபிரியங்கா டிஸ்மிஸ்; ஜனாதிபதி ஒப்புதல்: அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Minister ,Chandrapriyanka ,CM ,Puducherry ,Chief Minister ,Governor ,
× RELATED புதிய அணை தொடர்பான கேரள அரசின்...