×

மோடி கடவுளின் அவதாரம் என்பதை ஆர்.எஸ்.எஸ். நம்புகிறதா?.. அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

டெல்லி: மோடி கடவுளின் அவதாரம் என்பதை ஆர்.எஸ்.எஸ். நம்புகிறதா என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி அண்மையில் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,’என் தாயின் மரணத்துக்குப் பின்னர் பலவற்றை சிந்தித்து பார்க்கிறேன். நான் மனிதப்பிறவியே இல்லை என்பதை இப்போது உணர்கிறேன். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். அதனால் தான் நான் எப்போதும் சோர்வடையாமல் பணியாற்றி வருகிறேன். நான் கடவுளால் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டவன். நான் சோர்வடையாமல் பணியாற்றுவதற்கு கடவுள் கொடுத்த பரிசுதான் அந்த சக்தி.

மற்றவர்கள் இதனை விமர்சிக்கலாம், அதற்கு எதிராக சொல்லலாம். ஆனால், நான் அவற்றை முழுமையாக நம்புகிறேன். என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த கடவுள்தான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார். எனக்குள்ள ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலை கொடுக்க முடியும்’ என்று தெரிவித்தார். இது குறித்து பல்வேறு தலைவர்கள் விமர்சனம் செய்தனர். அந்த வகையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்;

2014-ல், தான் இந்த நாட்டின் பிரதான சேவகன் என்று மோடி கூறினார். 2019-ல், தான் ஒரு பாதுகாவலன் என்று கூறினார். 2024-ல், தனது தாயின் வயிற்றில் இருந்து பிறக்கவில்லை, தான் கடவுளின் அவதாரம் என்று பிரதமர் மோடி கூறுகிறார். பாஜகவில் உள்ள மூத்த தலைவர் ஒருவர், ‘புரி ஜெகநாதர் மோடியின் பக்தர்’ என்று கூறுகிறார். மோடி கடவுளின் அவதாரம் என்பதை ஆர்.எஸ்.எஸ். நம்புகிறதா?. ஆர்.எஸ்.எஸ். தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என கூறினார்.

The post மோடி கடவுளின் அவதாரம் என்பதை ஆர்.எஸ்.எஸ். நம்புகிறதா?.. அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி appeared first on Dinakaran.

Tags : MODI ,GOD ,R. S. S. ,Arvind Kejriwal ,Delhi ,S. S. Delhi ,Chief Minister ,
× RELATED மோகன் பகவத்தே சொல்லிட்டாரே இப்பவாவது...