×

சென்னையில் விற்கப்படும் 22 வகையான கருவாடுகளில் உடல் நலனை பாதிக்கும் ரசாயனங்கள் கலப்பு: தனியார் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னை: சென்னையில் விற்கப்படும் 22 வகையான கருவாடுகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள் உள்ளதாக தனியார் கல்லூரி நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழர்களின் உணவுக் கலாச்சாரத்தில் கருவாட்டுக்கு மிக முக்கிய இடம் உண்டு. ஊறுகாய், காய்கறி, வத்தல் என்று உணவுப் பொருட்களை பதப்படுத்தி நீண்ட நாட்களுக்கு அவற்றைப் பயன்படுத்தி கொள்ளும் தமிழர்களின் உத்திகளில் கருவாடு தயாரித்தல் முறையும் ஒன்று. மீன்களை வெயிலில் முழுமையாக காய வைத்து, அதிலுள்ள நீர்ச்சத்து வற்றிய பின்னர் எஞ்சிய இறைச்சி பகுதியைத்தான் கருவாடாக பயன்படுத்துகின்றனர்.

வெயிலில் உலர்த்தப்படும் மீன்களில் நுண்ணுயிர்களின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. ஆனால், அதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் ஏராளம். கருவாடுகளில் புரதம், ஆண்டிஆக்ஸிடன்ட், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி-12, செலினியம், நியசின் உள்ளிட்ட சத்துக்கள் அனைத்துமே உள்ளன. இருப்பினும் தற்போது உணவில் சேர்த்துக்கொள்ளும் கருவாடு நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்க கூடியதாக உள்ளது. குறிப்பாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் விற்கப்படும் 22 வகையான கருவாட்டில் அதிக அளவு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் 17 வெவ்வேறு இடங்களில் இருந்து வஞ்சிரம், மத்தி, சூரை, நெந்திலி, மலபார் நெத்திலி உள்ளிட்ட 22 வகையான கருவாடை எடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. பெரும்பாலும் இவ்வகையான கருவாடுகளே சந்தையில் விற்கப்படுகிறது. இவை தரமானதாக உள்ளததா என்று தனியார் கல்லூரி ஆய்வு நடத்தியது. அதில் சென்னையில் விற்பனை செய்யப்படும் 22 வகையான கருவாடுகளில், அனுமதிக்கப்பட்ட அளவைகாட்டிலும் அதிகளவில் காட்மியம், காரீயம், கோபால்ட் உள்ளிட்டவை உள்ளன என்பது தெரியவந்துள்ளது. அதாவது ஒரு கிலோ கருவாட்டில் 0.05 மி.கி. அளவுக்கு காட்மியம் இருக்கலாம்.

ஆனால் சென்னையில் விற்கப்படும் கருவாட்டில் ஒரு கிலோவுக்கு 2.18 முதல் 3.51 மி.கி. அளவுக்கு காட்மியம் உள்ளது. கருவாடுகளின் தரம் குறைவதற்கு முக்கிய காரணமாக காற்று மாசுபாடு மற்றும் தரக்குறைவான உப்புப் பயன்பாடுத்துவதே முக்கியமாக கருதப்படுகிறது. ரசாயனக் கலப்பு மிகையாக உள்ள கருவாடுகளை சாப்பிட்டால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட கூடும் என ஆய்வின் முடிவில் தகவல் வெளியாகியுள்ளது. எனவே ரசாயன கலப்பை கட்டுப்படுத்த அடிக்கடி சோதனைகளை நடத்த வேண்டும். விதிகளை மீறி ரசாயனம் கலந்த கருவாடுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post சென்னையில் விற்கப்படும் 22 வகையான கருவாடுகளில் உடல் நலனை பாதிக்கும் ரசாயனங்கள் கலப்பு: தனியார் ஆய்வில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...