×

ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக 8 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: சென்னையில் வெறிச்சோடிய சாலைகள்,பஸ், ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

சென்னை: ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை வழக்கமாக சென்னையில் தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 651 பேருந்துகள் இயக்கப்பட்டன. மற்ற ஊர்களில் இருந்து 1700 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. வெள்ளிக்கிழமையை பொருத்தமட்டில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர். நேற்றைய தினத்தை பொருத்தவரை பேருந்துகளிலும், ரயில்களிலும் சொந்த ஊர் செல்ல அதிகப்படியானோர் முன்பதிவு செய்திருந்தனர்.

இதன் காரணமாக நேற்று 3,050 பேருந்துகள் இயக்கப்பட்டன. காலை முதல் மாலை வரை ஏராளமானோர் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டப்படி பயணம் மேற்கொண்டனர். மாலை 6 மணிக்கு மேல் கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. விடியவிடிய பொதுமக்களின் வசதிக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்றைய தினம் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், தெற்கு ரயில்வே நிர்வாகம் கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்கியது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பகல் நேரத்தில் புறப்படும் ரயில்கள் முழுவதும் நிரம்பி காணப்பட்டன. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் மட்டுமின்றி கோவை, கேரளா மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இடங்கள் முழுமையாக நிரம்பியது. முன்பதிவு செய்யாதோர் ரயில் நடைமேடை வருவதற்கு முன்பாகவே, பயணிகள் போட்டிப்போட்டுக்கொண்டு ரயிலில் ஏறி இடம் பிடித்தனர்.

இரண்டு தினங்களில் 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரயில்களில் பயணம் மேற்கொண்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் வழக்கம் போல, ஆம்னி பஸ்களில் பயணம் மேற்கொண்டனர். ஆம்னி பேருந்துகளில் அதிகப்படியான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. குறிப்பாக, கோவை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல சாதாரண நாட்களை விட 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.

பொதுமக்களின் புகாரை தொடர்ந்து போக்குவரத்து துறையினரால் 1500க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் பறிமுதலும் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பொதுமக்களின் புகார் வந்த நிலையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது புகார் அளிக்க 9043379664 என்ற எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேபோல், ஆம்னி பேருந்து கட்டணத்தை அறிய www.aoboa.co.in என்ற இணையத்தில் காணவும் வழிவகை செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களாக அரசு பேருந்துகள், ரயில்கள், ஆம்னி பேருந்துகள், கார்கள், வேன்கள், பைக்குகள் என ஒட்டுமொத்தமாக 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். வழக்கத்தைவிட நேற்று பரனூர் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதை காண முடிந்தது. பொதுமக்களின் நலன் கருதியும், அவர்களின் வசதிகேற்ப போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள சென்னை மற்றும் செங்கல்பட்டு போக்குவரத்து காவல்துறையினர் தகுந்த ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

The post ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக 8 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: சென்னையில் வெறிச்சோடிய சாலைகள்,பஸ், ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ayudha ,Puja ,Chennai ,Ayudha Puja ,
× RELATED வேதாரண்யம் அருகே வாராஹிஅம்மன் கோயில் கும்பாபிஷேகம்