×

திருமலை தேவஸ்தான ஆண்டு வருவாயில் திருப்பதி மாநகராட்சிக்கு 1% வழங்கும் முடிவு நிராகரிப்பு: ஆந்திர அரசு அதிரடி


திருமலை: திருமலை தேவஸ்தான ஆண்டு வருவாயில் 1 சதவீதம் திருப்பதி மாநகராட்சிக்கு வழங்கும் முடிவை ஆந்திர அரசு அதிரடியாக நிராகரித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் தினசரி கோடிக்கணக்கில் காணிக்கை கிடைக்கிறது. இந்நிலையில் வருடாந்திர வருவாயில் 1 சதவீதத்தை திருப்பதி மாநகர வளர்ச்சிக்கு வழங்க திருப்பதி தேவஸ்தானம் விரும்பியது. இதுதொடர்பாக சில வாரங்களுக்கு முன்பு அறங்காவலர் குழு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி தலைமையில் தேவஸ்தானத்திற்கு கிடைக்கும் வருவாயில் ஆண்டுக்கு 1 சதவீதத்தை திருப்பதி மாநகராட்சிக்கு வழங்கி அதன்மூலம் திட்டப்பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான அறிக்கையை ஆந்திர அரசுக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் இதற்கு தெலுங்கு தேசம், பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பக்தர்கள் மூலம் கிடைக்கும் வருவாயை கோயில் பணிகள், சமூக நல பயன்பாடு, ஆன்மிகம் ஆகியவற்றுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தன. இந்நிலையில் நேற்றிரவு ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், `திருப்பதி மாநகர வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் தேவஸ்தானம் சார்பில் 1 சதவீத நிதியை வழங்குவதாக அறிவித்த முடிவை ஆந்திர அரசு நிராகரிக்கிறது’ என தெரிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம் தனி நிர்வாக குழு என்றாலும் தேவஸ்தானம் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் ஆந்திர மாநில அரசு அனுமதி அளித்தால் மட்டுமே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருமலை தேவஸ்தான ஆண்டு வருவாயில் திருப்பதி மாநகராட்சிக்கு 1% வழங்கும் முடிவு நிராகரிப்பு: ஆந்திர அரசு அதிரடி appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Devastana ,Tirupathi Municipality ,AP government ,Thirumalai Devastana ,Tirupati Municipal Corporation ,Tirupati Municipality ,Dinakaran ,
× RELATED சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப...