×

என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும்: ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளை சிறையில் கழித்து, ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்த நூறு வயதைக் கடந்தவர் தோழர் சங்கரய்யா.

தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவர் மாணவத் தலைவர், சிறந்த பொதுவுடமை சிந்தனையாளர், சிறந்த சட்டமன்ற உறுப்பினருமான என். சங்கரய்யா அவர்களின் ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக 18.08.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு (Syndicate) கூட்டத்தில் அவருக்குக் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பின்னர் 20.09.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் கூட்டத்தில் எதிர்வரும் பட்டமளிப்பு விழாவில் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கௌரவ முனைவர் பட்டயம் அல்லது சான்றிதழில் பல்கலைக்கழக வேந்தர் கையொப்பமிட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் முனைவர் பட்டம் வழங்க அனுமதி கோரும் கோப்பு பல்கலைக்கழகத்தால் ஆளுநர்-வேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்ட போது, அவர் அதில் கையொப்பமிட மறுத்துள்ளார். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட உன்னத தலைவரை முனைவர் பட்ட கோப்பில் கையெழுத்திடாமல் தமிழக ஆளுநர் அவமதிப்பு செய்துள்ளார். ஆளுநர் தமது சித்தாந்த சிந்தனையை கடந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும்.02.11.2023 அன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு (Syndicate) மற்றும் ஆட்சிப் பேரவையில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி என்.சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் .

The post என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும்: ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sankaraya ,M. M. K. ,President ,Jawahirulla ,Chennai ,N. Jawahirulla ,Humanist People's Party ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...