×

இந்த வார விசேஷங்கள்

திருவோண விரதம்
22.10.2023 – ஞாயிறு

27 நட்சத்திரங்கள் இருந்தாலும் சிவனுக்குரிய திருவாதிரை மற்றும் பெருமாளுக்குரிய திருவோணம் இவ்விரண்டு நட்சத்திரங்கள்தான் ‘திரு’ என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது. ‘‘திருவோணத்தான் உலகாளும்” என்பார் பெரியாழ்வார். பெருமாளின் இந்த நட்சத்திரத்தை ஒட்டி மாதம்தோறும் விரதம் மேற்கொள்வது திருவோண விரதம் ஆகும். வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷம் மலரும். நிம்மதி வெகுமதியாகும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமலையப்பன் நட்சத்திரம் புரட்டாசி திருவோணம். ஒப்பிலியப்பன் கோயிலில் திருவோணம் ஏக விசேஷம்.

மார்க்கண்டேயன் மகளான பூமா தேவியை மணந்து கொள்ள பெருமாள் பெண் கேட்டதும் பங்குனி மாத திருவோண நட்சத்திரம். திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே உணவேதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் ஆழ்வார் பாசுரங்கள் பாடுவது, விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்வது நல்ல பலன் கொடுக்கும்.

மறுநாள் அதிகாலையில் குளித்து பெருமாள் கோயிலுக்கு சென்று, துளசி மாலை சாற்றி வழி படலாம். கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில், பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும். நிவேதனத்தில் உப்பு சேர்க்கக் கூடாது.

துர்காஷ்டமி
22.10.2023 – ஞாயிறு

நவராத்திரி 9 நாள்கள் என்றாலும் கடைசி மூன்று நாள்கள் மிக முக்கியம். அஷ்டமி, நவமி, தசமி ஆகிய மூன்று நாள்கள் விரதமிருந்து அம்பாளை வழிபடுவது சிறந்தது. வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள், துர்காஷ்டமி நாளில், அசுரனை வதம் செய்தபிறகு, கருணையுடன் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் அம்பாளை அலங்கரித்து வழிபட வேண்டும். அஷ்ட சக்திகளுடன் அபய – வரதம், கரும்புவில் மற்றும் மலர் அம்பு ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவாள். அஷ்டமியில் நாளில் 9 வயதுள்ள குழந்தையை, துர்கையாக பூஜிக்க வேண்டும்.

இதனால் செயலாற்றல் கிடைக்கும்; எதிரிகளின் தொல்லைகள் விலகும்; சத்ரு பயம் நீங்கும். கொலு வைக்காதவர்கள் அன்றைய தினம் தங்கள் வீடுகளில் உள்ள அம்பிகை படத்துக்கு முல்லை, மல்லிகை அல்லது வெண் தாமரை மலர்கள் சமர்ப்பித்து, சாம்பிராணி தூபமிட்டு, நல்லெண்ணெய் தீபமேற்றி, தேங்காய் சாதம், கொண்டைக் கடலை சுண்டல் ஆகியவற்றைப் படைத்து துர்கையை வணங்கலாம்.

சரஸ்வதி பூஜை – பொய்கை ஆழ்வார் அவதாரம் 23.10.2023 – திங்கள்

இன்று இரண்டு விசேஷம். நவராத்திரியில் மகா நவமி எனும் ஆயுத பூஜை நாள். கல்விக்கும், கலைகளுக்கும், செய்யும் தொழிலுக்கும் படையல் போடும் நாள். தேவி துர்கா, மஹிஷாசுரா என்ற அரக்கனை அஷ்டமி மற்றும் நவமி சந்திப்பில் கொன்றதாகவும், அதன் பின்னர் வதத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேவி கீழே போட்டு விட்டதாகவும் நம்பப்படுகிறது. அந்த நாளைதான் ஆயுத பூஜையாக கொண்டாடத் தொடங்கினர். ஆயுத பூஜை கைவினைஞர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த நாளில் வண்டி, வாகனம் ஓட்டுபவர்கள், அதை தொழிலாக கொண்டவர்கள் ஆயுத பூஜை அன்று சுக்கிரனும், புதனும் இணைந்த ஓரையில் நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்து கழுவி துடைத்து, சந்தன குங்குமம் இட்டு, மலர்களை மாலையாக போட்டு, திருஷ்டிகள் நீங்க எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி குங்குமம் தடவி அதன்மேல் வண்டி வாகனத்தை ஏற்றுவது சம்பிரதாய நடைமுறை.

இவ்வாறு செய்வதால் வண்டி வாகனங்களால் வரக்கூடிய வருமானம் பெருகும் இதே நாள் ஆழ்வாரில் முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வாரின் அவதார நாள். காஞ்சிமாநகரில் உள்ள திருவெஃகா என்ற வைணவத் திருப்பதியின் வடபகுதியில் இருந்த ஒரு பொய்கையில், ஒரு பொற்றாமரை மலரில் திருஅவதாரம் செய்தார். இவரைத் திருமால் ஏந்திய படைக்கலங்களுள் பாஞ்ச சந்நியம் (திருமால் கைச்சங்கின் பெயர்) என்பதன் அமிசம் (ஒருகூறு) பொய்கையில் தோன்றியவராதலால் பொய்கையாழ்வார் எனப்பட்டார்.

வையம் தகளியா எனத் தொடங்கி இயற்றியருளிய 100 வெண்பாக்களைக் கொண்டது முதல் திருவந்தாதி என்று பெயர் பெற்றது. அந்தாதித் தொடையில் இயற்றப்பட்ட மிகப் பழைய பிரபந்தங்களுள் இதுவும் ஒன்றாகும்.

விஜயதசமி
24.10.2023 – செவ்வாய்

இன்று பல சிறப்புக்கள் உண்டு. 1. நவராத்திரியின் நிறைவு நாளான விஜய தசமி. சதயம் என்பதால் மாமன்னன் ராஜராஜசோழனின் விழா தஞ்சையில் கோலாகலமாக நடைபெறும். மத்வர் ஜெயந்தியும் இன்று வருகிறது. இந்திய சமய தத்துவ மரபில் அவர்களில் மூவர் மிகவும் முக்கியமானவர்கள்.

1. ஆதிசங்கரர் – அத்வைதம்,
2. ராமானுஜர் – விசிஷ்டாத்வைதம்,
3. மத்வர் – துவைதம்.

வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்களின் விளக்கங்களையும், தத்துவங்களையும் ஆதிசங்கரர், ராமானுஜர், மத்துவர் ஆகியோர் அளித்துள்ளனர். ஆச்சாரியர் மத்வரின் காலம் (கி.பி) 1238 முதல் 1317. இவர் உடுப்பியிலிருந்து 8 மைல் தொலைவிலுள்ள சிற்றூரில், தந்தை மத்யகேஹபட்டர், தாய் வேதவதிக்கும் மகனாக அவதரித்தார். இவருக்குக் கல்யாணி தேவி என்ற மூத்த சகோதரியும், ஒரு தம்பியும் உண்டு. தாய் தந்தையர் இவருக்கு வைத்தபெயர் ‘வாசுதேவன்’ என்பதாகும். வேதாந்த ஸாம்ராஜ்ய பீடத்தில் குருவினால் அமர்த்தப்பட்ட போது பெற்ற பெயர் `ஆனந்த தீர்த்தர்’.

ஸ்ரீமத்வர் ஒருமுறை கடற்கரையில் அமர்ந்து தியானம் செய்தபொழுது பெரும் புயல் வீசியதாம். அப்போது கரை நோக்கி வந்துகொண்டிருந்த கப்பல், கடல் நீரினால் அலைக் கழிக்கப்பட்டு மூழ்க இருந்தது. அதில் உள்ளப் பயணிகளின் கூக்குரலைக் கேட்டு தியானம் கலைந்த மத்வர், அவர்களைக் காக்கக் கோரித் தனது குருவை மனதால் வணங்கினார். குருவருளும் இவரது தவ வலிமையும் சேர்ந்து கப்பலில் இருந்த வியாபாரிகள் காப்பாற்றப் பட்டனராம்.

வியாபாரிகள், தங்கள் உயிரைக் காப்பாற்றிய ஸ்ரீமத்வருக்கு விலை மதிப்பில்லாத பொன்னும் பொருளும் வழங்க முன்வந்தனர். அவற்றை வாங்க மறுத்த ஸ்ரீமத்வர், அக்கப்பலில் இருந்த பாறை போன்ற பொருளை மட்டுமே கேட்டுப் பெற்றார். அப்பாறையில் கோபி சந்தனத்தால் மறைக்கப்பட்டிருந்த கிருஷ்ண விக்கிரகத்தை வெளிக் கொணர்ந்து உடுப்பியில் பிரதிஷ்டை செய்தார். ஒரு நாள் மத்வர் மீது வானிலிருந்து மலர்மாரி பொழிந்தது.

மலர்க் குவியலை விலக்கிப்பார்த்த போது அவரைக் காணவில்லை; மறைந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அவரின் ஜெயந்தி தினம். இன்று, இரண்டாவது ஆழ்வாரான பூதத்தாழ்வாரின் அவதார தினம். திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கௌமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தின் அம்சமாக மாமல்லபுரத்தில் அவதரித்த பூதத்தாழ்வார் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார்.

இது நூறு வெண்பாக்களால் ஆனது. மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயிலை அடுத்துள்ள பகுதியிலே இவர் அவதாரம் நிகழ்ந்ததாகக் கருதப் படுகிறது. இக்கோயிலின் முன்பு இதைக் குறித்த மண்டபம் ஒன்றும் உண்டு.

ஏகாதசி
25.10.2023 – புதன்

ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெருமை உண்டு. புண்ணியம் உண்டு இது குறித்து `பிரம்ம வைவர்த்த’ புராணத்தில் விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் இந்த ஏகாதசிக்கு பாபாங்குச ஏகாதசி என்று பெயர். அங்குசம் என்பது யானையை அடக்குகின்ற ஒரு கருவி. பாவங்கள் என்கின்ற யானையை இந்த ஏகாதசி விரதத்தால் அடக்கிவிடலாம். அப்படிப்பட்ட
நன்மையைத் தருவது இந்த ஏகாதசி.

மகாபாரதத்தில் யுதிஷ்டிர மகாராஜாவுக்கு கிருஷ்ணர் இந்த ஏகாதசி மகிமையை எடுத்துரைக்கிறார். இந்த ஏகாதசி விரதத்தை ஒருவர் கடைப் பிடித்தால், அவருடைய 10 தலைமுறை நற்கதிக்கு செல்லும். இன்னும் ஒரு கோணத்தில், அவருடைய தாயின் வழியில் பத்து தலைமுறைக்கும், தந்தையின் வழியில் பத்து தலைமுறைக்கும் அவரோடு சேர்த்து 21 தலைமுறைக்கு ஏற்றம் கிடைக்கும் என்று பலன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஏகாதசியில் மூன்று விஷயம் முக்கியம். ஒன்று உபவாசம். இரண்டாவது துவாதசி பாரனை. மூன்றாவது ஏழைகளுக்கு அன்னதானமும் இயன்ற பொருள் தானமும் அளித்தல். ஏகாதசியில் எது வொன்று தானம் கொடுத்தாலும் அது 100 மடங்கு கொடுத்ததற்கு சமம் என்று பெரியோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இந்த உலகத்தில் வாழ் வாங்கு வாழ்ந்து, எல்லாச் சுகங்களையும் முறையாக அனுபவித்து, உலக வாழ்க்கையை நீத்தபின், பெருமானுடைய மோட்ச சாம்ராஜ்யம், ஏகாதசி விரதத்தால் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

இன்று மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வாரின் அவதார் தினம். பேயாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருமயிலை என வழங்கிய மயிலாப்பூரில் நந்தகம் எனப்படும் வாளின் அம்சமாக அவதரித்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் உள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர், இது நூறு வெண்பாக்களைக் கொண்டது.

அழகர் (நூபுர கங்கையில்) எண்ணெய் காப்பு
26.10.2023 – வியாழன்

இன்று மகா பிரதோஷம். இந்தநாளில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷமான பூஜைகள் நடைபெறும். அப்போது 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதில் கலந்து கொண்டு விரதமிருக்க பற்பல நன்மைகள் உண்டு. மதுரைக்குப் பக்கத்திலே பிரசித்தி பெற்ற அழகர் கோயிலில் (திருமலிருஞ்சோலை) சுந்தர்ராஜ பெருமாளுக்கு நடைபெறும் ஐப்பசி உற்சவம் வெகு சிறப்பானது. அழகர் கோயில் மேலே நூபுர கங்கை (சிலம்பாறு) என்று ஒரு தீர்த்தம் இருக்கிறது.

அதன் அருகில் ராக்காயி அம்மன் கோயில் என்று ஒரு இடம் இருக்கிறது. ஐப்பசி மாத வைபவ தீர்த்தவாரி உற்சவத்திற்கு அழகர் காலையில் பல்லக்கில் புறப்படுவார். வழி நெடுக தீப ஆராதனை காட்டி வழிபடுவர். கருட தீர்த்தம், அனுமன் தீர்த்தம், சோலைமலை முருகன் கோயில் என இங்கெல்லாம் சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதற்குப் பிறகு ராக்காயி அம்மன் கோயிலில் மாதவி மண்டபத்தில் எழுந்தருள்வார்.

அவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்படும். அதன் பிறகு பெருமாளுக்கு மூலிகை மருந்துகள் கலந்த வாசனை தைலங்கள் சாத்தப்படும். தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இது கண்கொள்ளாக் காட்சியாகும்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Perumalakuriya ,
× RELATED சோதனைகளை போக்கிடுவார் சோமசுந்தர விநாயகர்