திருவாடானை, அக். 21: திருவாடானை அருகே சேதமடைந்த சமுதாயக்கூடத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே பண்ணவயல் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக்கூடம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த 5 ஆண்டுகளாக இந்த சமுதாயக்கூட கட்டிடம் பராமரிக்கப்படவில்லை. இதனால் மழை காலங்களில் ஒழுகுகிறது.
மேலும் கட்டிட சிலாப், மேற்கூரை சிமென்ட் பூச்சு அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது. மழையில் நனைந்து கம்பிகள் துருப்பிடித்துள்ளதால் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் இந்த சமுதாயக்கூடம் பூட்டியே கிடக்கிறது. சமுதாயக்கூடத்தை சுற்றிலும் முள்செடிகள் வளர்ந்து புதர்போன்று காட்சியளிக்கிறது. ஆபத்தான நிலையிலுள்ள இந்த சமுதாயக்கூடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய சமுதாயக்கூடம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருவாடானை அருகே சேதமடைந்த சமுதாயக்கூடத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.
