×

திரு.வி.க.நகர், ஆலந்தூர், பெருங்குடி மண்டலங்களில் மழைநீர் வடிகால், சாலை பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திரு.வி.க.நகர், ஆலந்தூர், பெருங்குடி மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால், சாலை பணிகளை ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சியில் 388 கி.மீ. நீளத்திற்கு 471 பேருந்து தட சாலைகள், 5,270 கி.மீ. நீளத்திற்கு 34,640 உட்புற சாலைகள் என மொத்தம் 5,658 கி.மீ. நீளத்தில் 35,111 சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 5,509 சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், சேவை துறைகளான சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு மின்சாரத்துறை, தனியார் நிறுவனங்களின் மூலம் மின் புதைவடம் மற்றும் காஸ் பைப்லைன் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் 2,952 சாலைகளில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, 1,934 சாலைகளில் நிரந்தர சாலை பணிகள் மேற்கொள்ளவும், 527 சாலைகளில் தற்காலிக சாலை பணிகள் மேற்கொள்ளவும் சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவற்றில் நிரந்தரமாக சாலை அமைக்க ஒப்படைக்கப்பட்டுள்ள 1,934 சாலைகளில், 1,670 சாலை பணிகள் முடிக்கப்பட்டு, 255 சாலைகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 9 சாலைகளில் நிரந்தர சாலைகள் அமைக்கும் பணி வரும் வாரத்தில் மேற்கொள்ளப்படும். தற்காலிகமாக சாலை அமைக்க ஒப்படைக்கப்பட்டுள்ள 527 சாலைகளில் 294 சாலை பணிகள் முடிவுற்று, 211 சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 22 சாலை பணிகள் வரும் வாரத்தில் மேற்கொள்ளப்படும்.

வெள்ள மேலாண்மை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 2,624 கி.மீ. நீளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில், கடந்த 2 ஆண்டுகளில் 685.68 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிவுற்றுள்ளன. இந்த நடப்பாண்டில் 170.65 கி.மீ. நீளத்தில் மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 14 முக்கியப் பகுதிகளில் 1007 மீ. நீளத்தில் உள்ள 44 இடைவெளிகள் மற்றும் கொசஸ்தலையாறு மற்றும் கோவளம் வடிநில பகுதிகளில் 1,115 மீ. நீளத்தில் உள்ள 30 இடைவெளிகளை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால்களில் 6,806 குழல் குழாய்கள் பொருத்தும் பணி மற்றும் 2,944 வண்டல் வடிகட்டித் தொட்டிகள் மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், 1447.89 கி.மீ. நீளத்திலான மழைநீர் வடிகால்களின் தூர்வாரும் பணிகளும், சிறு பழுதுகளை சரிசெய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால், வண்டல் வடிகட்டித் தொட்டி, சாலை மற்றும் சீரமைப்புப் பணி, நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணி ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஆணையர் ராதாகிருஷ்ணன், பெருங்குடி மண்டலம், வார்டு-184க்குட்பட்ட கல்லுகுட்டை, பெரியார் சாலையில் சாலை வெட்டுக்கள் முடிவுற்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை அமைக்கும் பணி மற்றும் மழைநீர் வடிகால் பணியினைப் பார்வையிட்டு, அங்கு சாலை மற்றும் தெருக்களில் குப்பை கொட்டப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்து, இதுகுறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர், ஆலந்தூர் மண்டலம், வார்டு-156க்குட்பட்ட மதனந்தபுரம் பிரதான சாலை, முகலிவாக்கம் பிரதான சாலை, சுபஸ்ரீநகர் விரிவு-9வது தெரு, அமிர்தலிங்கம் தெரு மற்றும் உட்புறச் சாலைகளில் நெடுஞ்சாலைத்துறையின் சாலை வெட்டுக்கள் முடிவுற்று தற்போது மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை அமைக்கும் பணி மற்றும் சீரமைப்புப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, திரு.வி.க.நகர் மண்டலம், கொளத்தூர், சுப்பிரமணியபுரம் 1 முதல் 5 தெருக்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சாலைகளில் நீண்டகாலமாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

* வண்டல்கள் அகற்றம்

சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 16 கால்வாய்களில் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணி 19,405 மீட்டர் நீளத்தில் முடிவடைந்துள்ளது. 10,385 மீட்டர் நீளத்தில் கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுப் பணித்துறையின் சார்பிலும் நீர்நிலைகளில் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post திரு.வி.க.நகர், ஆலந்தூர், பெருங்குடி மண்டலங்களில் மழைநீர் வடிகால், சாலை பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thiru.V.K.Nagar ,Alandur ,Perungudi ,CHENNAI ,Perungudi Zones ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED ஆதம்பாக்கம் பகுதியில் குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க கோரிக்கை