×

திருவள்ளூர் மார்க்கெட் கூட்டு சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பியால் பரபரப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரின் மையப் பகுதியான பஜாரை சுற்றி 10-க்கும் மேற்பட்ட தெருக்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காய்கறி, மளிகை, பூ கடைகள் உள்பட அனைத்து வகையான கடைகளும் உள்ளது. இந்த பஜாருக்கு திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் வந்து செல்கின்றனர். மேலும் பஜார் பகுதியை சுற்றி அரசு பள்ளி, தனியார் பள்ளி, திருமண மண்டபங்கள், கோவில்கள் உள்ளது.

இதனால் இந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகனங்களால் நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படும். இந்நிலையில் பஜாரின் மையப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே கூட்டுச்சாலையில் நேற்று காலை மேலே செல்லும் உயர் மின் அழுத்த கம்பி திடீரென அறுந்து ஒரு பகுதி சாலையின் குறுக்கேயும் மற்றொரு பகுதி கடைகளுக்கு முன்பும் விழுந்துள்ளது.

இதனால் இந்த சாலையில் உள்ள டீக்கடைக்கு வந்த சுமார் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மின் ஒயர் உரசி நெருப்பு சிதறியதால் அலறி அடித்து ஓடி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இதையடுத்து உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த பஜார் பகுதியில் காலை 7 மணி என்பதால் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

The post திருவள்ளூர் மார்க்கெட் கூட்டு சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பியால் பரபரப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur Market Joint Road ,Thiruvallur ,Bazaar ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்