×

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் ரூ.59.80 லட்சம் மதிப்பில் சாலைப் பணிகள் நிறைவு: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி அண்ணாநகர் பகுதியில் சேதமடைந்த சாலை குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை பேரூராட்சி 10வது வார்டு அண்ணாநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் திருவள்ளூர் சாலையையும், நாகலாபுரம் சாலையையும் இணைக்கும் தார்ச்சாலை உள்ளது. நீண்ட காலமாக இச்சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.

இதையறிந்த பேரூராட்சி நிர்வாகம் கடந்த 2016ம் ஆண்டு ரூ.50 லட்சம் செலவில் புதிதாக பிளாஸ்டிக் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ஊத்துக்கோட்டை மின்வாரியம் சார்பில், மின்சார கேபிள் வயர்கள் புதைப்பதற்காக, இந்த சாலையை துண்டித்து கேபிள் புதைக்கும் பணிகள் நடைபெற்றது. இதனால் இந்த சாலை மீண்டும் சேதமடைந்து தற்போது போக்குவரத்திற்கு லாயக்கற்று குண்டும், குழியுமாக மாறிவிட்டது.

மேலும் இச்சாலையில், மாணவர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் சைக்கிள்களிலும், கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் பைக்குகளிலும் செல்லும் போது கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே கடந்த 5 வருடமாக குண்டும் குழியுமாகவே காணப்படும் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என தினகரன் நாளிதழில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.

அதன் பின்னர் நடந்த பேரூராட்சி மன்ற கூட்டத்தில் அண்ணாநகர் மற்றும் பாலாஜி நகர் சாலையை சீரமைக்க ரூ.59.80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி கடந்த இரண்டு நாட்களில் 10வது வார்டு அண்ணாநகர் பகுதியிலும், 11வது வார்டில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் புதியதாக தார்சாலை அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து, தினகரன் நாளிதழுக்கு நன்றி கூறினர்.

The post ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் ரூ.59.80 லட்சம் மதிப்பில் சாலைப் பணிகள் நிறைவு: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Uthukottai Municipality ,Oothukottai ,Annanagar ,Oothukottai Municipality ,Dinakaran ,
× RELATED ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு...