×

திமுக ஊராட்சி மன்ற தலைவர் வீட்டுக்குள் புகுந்த போலி இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்: போலீசார் விசாரணை

கூடுவாஞ்சேரி: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட டிடிசி நகரை சேர்ந்தவர் தமிழ்அமுதன்(52). இவர் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவராகவும், திமுக கிளை செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி மலர்விழிதமிழ்அமுதன் குன்றத்தூர் ஒன்றிய கவுன்சிலராகவும், மாவட்ட மகளிர் அணி துணை தலைவியாகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் தமிழ்அமுதன் உட்பட ஆதனூர் ஊராட்சியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்களை பிரபல ரவுடி கும்பல் ஒன்று பணம் கேட்டு மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்தது.

இதில், கொடுக்க மறுப்பவர்களை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தும் வந்தது. இதில், பாதிக்கப்பட்ட நபர்கள் தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இதனையடுத்து பிரபல ரவுடிகள் 2 பேரை ஊரப்பாக்கம் அருகே உள்ள அருங்கால்-காட்டூர் வனப்பகுதியில் வைத்து கூடுவாஞ்சேரி போலீசார் என்கவுண்டர் செய்தனர். இதனால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால், ஒரு மாதம் கழித்து பிரபல தொழிலதிபரான தமிழ்அமுதனை தீர்த்துக்கட்ட பைக்கில் வளம் வந்த ரவுடி கும்பல் ஒன்று மீண்டும் அவரது வீடு மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நோட்டமிட்டபடி வந்தது.

அப்போது, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ரவுடி கும்பலை மணிமங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், தமிழ்அமுதனின் வீட்டிற்கும், ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கும் பாக்ஸர்கள் உட்பட துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை லுங்கி மற்றும் டீ சர்ட் அணிந்தபடி தமிழ்அமுதன் வீட்டிற்கு பைக்கில் குடிபோதையில் மர்ம ஆசாமி ஒருவர் வந்துள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் எஸ்ஐயிடம் நான் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மப்டியில் வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய போலீஸ் எஸ்ஐ தமிழ்அமுதனை சந்திக்க அவரது வீட்டுக்குள் அனுமதித்துள்ளார். பின்னர் அவர் முதல் மாடியில் சென்றதும் அங்கிருந்த போலீசார் தமிழ்அமுதனை சந்திக்க அனுமதிக்கவில்லை. அப்போது மர்ம ஆசாமிக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை கண்டதும் தமிழ்அமுதன் மற்றும் அவரது உறவினர்கள் ஓடி வந்து என்னவென்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் துர்காஸ்டாலின் உங்களிடம் ஒரு விஷயத்தை சொல்ல சொன்னார்கள். மேலும் நான் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நண்பர் என்றும் கூறியுள்ளார்.

இதனால், சந்தேகம் அடைந்த அங்கிருந்த போலீசார் அவரது ஐடி கார்டை கேட்டனர். உடனே அவர் எனது பைக்கில் இருக்கிறது. கீழே சென்று எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றவர் அங்கிருந்த, பைக்கை விட்டுவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்அமுதன் உடனே மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில், மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும், இதற்கிடையே எம்ஜிநகரில் உள்ள தமிழ்அமுதனின் மற்றொரு வீட்டுக்கு சென்ற அந்த மர்ம ஆசாமி வீட்டை சுத்தம் செய்யும்படி ஊராட்சி மன்ற தலைவர் என்னை அனுப்பி உள்ளார் என்று கூறியுள்ளார். இதில், சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் தமிழ்அமுதனுக்கு போன் செய்துள்ளனர். அதற்கு அவர் அதுபோன்று நான் யாரையும் அனுப்பவில்லை என்று கூறியுள்ளார். அதற்குள் அந்த மர்ம ஆசாமி அங்கிருந்தும் தப்பித்து ஓடியுள்ளார். மேலும் இதில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி திமுக ஊராட்சி மன்ற தலைவர் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமியால் ஆதனூர் ஊராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post திமுக ஊராட்சி மன்ற தலைவர் வீட்டுக்குள் புகுந்த போலி இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : DMK ,panchayat ,Kuduvancheri ,Tamil Amuthan ,DTC ,Adanur panchayat ,Kanchipuram district ,Kunradthur ,DMK panchayat ,Dinakaran ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு