×

கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு வாக்களிக்காதவர்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறோம்

சென்னை: கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர், ஜி.கே.எம். காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சமயத்தில், ‘நீங்கள் தான் ஆட்சி அமைக்கப் போகிறீர்கள். மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள், இந்த வெற்றியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்று நிருபர்கள் கேட்டபோது, நீங்கள் வாக்களித்து சரியான நபரைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று சொல்ல வேண்டும், அவர்கள் மகிழ்ச்சி அடையவேண்டும். மகிழ்ச்சி அடையக்கூடிய அளவிற்கு நாங்கள் பணியாற்றுவோம். அவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்காத மக்களும் மகிழ்ச்சி அடையக்கூடிய அளவிற்கு இவர்களுக்கு ஓட்டுப் போடாமல் விட்டுவிட்டோமே என்று கவலைப்படக்கூடிய அளவிற்கு அவர்கள் பாராட்ட வேண்டும்.

அதுதான் என்னுடைய குறிக்கோள் என்று சொன்னேன். அதுதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. எவ்வளவோ திட்டங்கள், தேர்தல் நேரத்தில் அறிவித்த உறுதி மொழிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்,
வரும் ஆண்டில் 203 பணிகளை முடிப்பதற்காக ரூ.5 ஆயிரத்து 901 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், அவர் பாராட்டி செய்தி கொடுத்திருக்கிறார். நான் பத்து கோரிக்கைகளை அனுப்பி வைத்திருக்கிறேன். அதில் 3 கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றி கொடுத்துவிட்டார். நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று வெளிப்படையாக அவர் சொல்லி இருக்கிறார்.

யாரென்று உங்களுக்குத் தெரியும், தெரியும் அல்லவா? அதை விளம்பரப்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால் அவருக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடும். ஆனால், வெளிப்படையாக வந்துவிட்டது, அவர் வேறு யாரும் அல்ல, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இதை சொல்வதற்குக் காரணம், கட்சி பாகுபாடு இல்லாமல் அரசியல் நோக்கத்தை எண்ணிப்பார்க்காமல், மக்களுடைய பிரச்னையை அடிப்படையாக வைத்து அவற்றையெல்லாம் இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதற்காகத்தான்.

இன்றைக்கு நீங்கள் எல்லாம் இல்லை என்றால், இந்தக் கட்சியே இல்லை. நீங்கள் எல்லாம் இந்த இயக்கத்தினுடைய வேர்கள். இந்த வேர்கள் தான் இன்றைக்கு மரமாக, கிளையாக வளர்ந்து, நாங்கள் எல்லாம் இந்தப் பொறுப்பு இருக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். அப்படிப்பட்ட முன்னோடிகளை பெருமைப் படுத்துவதற்காக ஏதோ ஒரு கடமை மட்டுமல்ல, நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் இந்த இயக்கம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். நீங்கள் தெம்போடு இருந்தால் தான் இந்த இயக்கம் வளரமுடியும். இந்த இயக்கம் வளர்ந்தால் மக்கள் நாட்டில் நலமாக வாழ்ந்திடமுடியும்.

அதற்காகத்தான் இன்றைக்கு உங்களை ஊக்கப்படுத்த, உற்சாகப்படுத்த இந்த பொற்கிழி வழங்குகிறோம். உங்கள் பணி முடிந்துவிட்டது என்று உங்களை விட்டுவிடமாட்டோம். ஏதோ ஓய்வு கொடுத்துவிட்டார்கள் என்று நீங்கள் நினைத்துவிடாதீர்கள். இன்னும் நீங்கள் எங்களுக்கு அறிவுரைகள், ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கிட வேண்டும். நீங்கள் பக்கபலமாக இருந்தால்தான், நாங்களும் கடமைகளை வேகவேகமாக நிறைவேற்றமுடியும். அந்த உணர்வோடுதான் உங்களை பெருமைப்படுத்துவதன் மூலமாக நாங்கள் பெருமைப்படுகிறோம். நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

The post கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு வாக்களிக்காதவர்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறோம் appeared first on Dinakaran.

Tags : Kolathur ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,DMK President ,Chief Minister of ,Kolathur Constituency ,MK Stalin ,G.K.M. ,
× RELATED மக்கள் நம்பிக்கை வைத்து...