×

அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருகே மகனை கிணற்றில் வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள்

*ராணிப்பேட்டை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

ராணிப்பேட்டை : பெற்ற மகனை கிணற்றில் வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து ராணிப்பேட்டை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம் தக்கோலம் அடுத்த கணபதிபுரம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் முனியப்பன்(40) முடிதிருத்தும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் காஞ்சிபுரம் அடுத்த போந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்த ராதா(34) என்பவருக்கும் திருமணமாகி தீபக்(7), ரூபன்(3) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் முனியப்பனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனமுடைந்த ராதா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் தீபக், ரூபன் ஆகிய இரண்டு பேரும் முனியப்பனுடைய தாய் மற்றும் தங்கையிடம் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி அன்று முனியப்பன் தனது மாமியார் வீட்டிற்கு சென்று மனைவி ராதாவிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். ஆனால் ராதா வர மறுத்து விட்டார்.

பின்னர் மறுநாள் முனியப்பன் கணபதிபுரத்திற்கு வந்து தனது மகன்களிடம் உனது தாய் என்னுடன் வரவில்லை என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அன்றைய தினம் முனியப்பன் தனது மகன்களிடம் நீச்சல் சொல்லி தருகிறேன் என சொல்லி அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாழடைந்த கிணற்றிற்கு அழைத்து சென்று இளைய மகன் ரூபனை கிணற்றில் தள்ளிவிட்டு, பின்னர் தீபக்கையும் தூக்கி கிணற்றில் வீசிவிட்டு முனியப்பன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதில் ரூபன் கிணற்றில் மூழ்கி இறந்தார். தீபக் மட்டும் உயிருடன் தப்பி வந்து நடந்த சம்பவத்தை அவரது பாட்டி, அத்தையிடம் மற்றும் ஊர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து முனியப்பனை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று ராணிப்பேட்டை இரண்டாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் குற்றம்சாட்டப்பட்ட முனியப்பனுக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் ₹15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து முனியப்பன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருகே மகனை கிணற்றில் வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள் appeared first on Dinakaran.

Tags : Thakolam ,Arakkonam ,Ranipet Court ,Ranipet ,Dinakaran ,
× RELATED ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி:...