×

சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை பாளை சேவியர் காலனியில் கழிவுநீர் தேக்கம்

*சுகாதார சீர்கேடுகளால் நோய் பரவும் அபாயம்

நெல்லை : பாளை சேவியர் காலனிகளில் காலிமனைகளில் அதிகளவு கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடுகள் பரவி வருகின்றன. சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அங்கு சீராக இல்லை.நெல்லை மாநகராட்சி 52வது வார்டுக்கு உட்பட்ட பாளை சேவியர் காலனியில் சுமார் 200 வீடுகள் உள்ளன. குழந்தை ஏசு தெரு, புனித அந்தோணியார் தெரு, புனித பீட்டர் தெரு, பேதுரு தெரு, சேவியர் காலனி முதல் தெரு, நடுத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களும் உள்ளன. பாளை சுற்றுவட்டார பகுதிகளில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அதிகம் வாழும் இடமாக பாளை சேவியர் காலனி உள்ளது. இக்காலனிக்கு அடிப்படை வசதிகள் இன்னமும் செய்து தரப்படவில்லை.

பாளை சேவியர் காலனி விரிவாக்க பகுதியாக இருப்பதால், இங்கு தொடர்ச்சியாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. பலர் வீடுகளை கட்ட காலிமனைகளை வாங்கி போட்டுள்ளனர். லேசாக மழை பெய்தால் கூட காலிமனைகளில் தண்ணீர் சூழ்ந்து கொள்வதோடு, வீடுகளில் உள்ள கழிவுநீரும் காலிமனைகளை சூழ்ந்து கொள்கிறது. குறிப்பாக புனித அந்தோணியார் தெருவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் காலிமனைகளில் சாக்கடை போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுத்தொல்லையும் பெருகி வருகிறது. மழைக்காலம் தொடங்கும் நிலையில், தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுகிறது.

பாளை சேவியர் காலனியில் ஆங்காங்கே காணப்படும் காலிமனைகளில் ஜல்லிகற்கள் கிடக்கும் இடங்களிலும், செடி, கொடிகள் அடர்ந்திருக்கும் பகுதிகளிலும் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷஜந்துக்களும் பெருகி வருகின்றன. காலிமனைகளை தாண்டி நடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். சில சமயங்களில் அங்கிருந்து வெளியேறும் விஷஜந்துக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் நுழைகின்றன.

சேவியர் காலனியில் பாதாள சாக்கடை பணிகளை பாதியில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். இதனால் சாலைகள் குழிகளோடு மோசமாக காட்சியளிக்கின்றன. புனித லூக்கா தெருவில் பாதாள சாக்கடை பணிகள் நிறுத்தப்பட்ட பகுதிகளில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மற்ற தெருக்களிலும் தரமான சாலைகள் இல்லை. சேவியர் காலனியில் உள்ள பூங்காவும் சிறுவர், சிறுமியர் பயன்படுத்தும் நிலையில் இல்லை.

பூங்காவில் அடிப்படை வசதிகள் இல்லாததால், பெயரளவிற்கே பூங்காவாக காட்சியளிக்கிறது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் கார்களை பூங்காவில் நிறுத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். பூங்காவை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் மழைக்காலம் வந்துவிட்ட நிலையில், சேவியர் காலனி காலிமனைகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி சுகாதார சீர்கேடுகளை களைய நெல்லை மாநகராட்சி சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை பாளை சேவியர் காலனியில் கழிவுநீர் தேக்கம் appeared first on Dinakaran.

Tags : Palai Xavier Colony ,Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு