×

தேனி மக்களவை தொகுதி வெற்றி விவகாரத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: தேனி மக்களவை தொகுதி வெற்றி விவகாரத்தில் ஓ.பி.ரவீந்திரநாத்தை தகுதிநீக்கம் செய்யக்கோரி தங்க தமிழ்ச்செல்வன் தாக்கல் செய்த மனு மீது ஓ.பி.ரவீந்திரநாத் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத், 76,319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அதில், தேனி மக்களவை தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பி.ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்கு அண்மையில் இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் திமுகவை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், தேனி மக்களவை தொகுதி வெற்றி விவகாரத்தில் வெற்றி செல்லாது என்பதற்கு பதிலாக ஓ.பி.ரவீந்திரநாத்தை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும் என கோரி மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. முதலில் இது அரசியல் விவகாரம், எனவே விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்தது. தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பைரவன், இந்த வழக்கு சரியாகத்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரவீந்திரநாத் தன்னுடைய சொத்து விவரங்களை முழுமையாக வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை. ரவீந்திரநாத் சொத்து விவரங்கள் குறித்து முழுமையாக தனியாக விசாரிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் வேட்பாளர்கள் சொத்து மதிப்பை முழுமையாக பதிவு செய்ய விதிகள் உள்ளன. விதிகள் இருந்தும் ரவீந்திரநாத் செய்யவில்லை.

இது உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என்பதால் தனியாக மனுத்தாக்கல் செய்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டது. ஓ.பி.ரவீந்திரநாத் தகுதி நீக்க விவகாரத்தில் தங்க தமிழ்ச்செல்வனின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே வெற்றியை எதிர்த்து வாக்காளர் மிலானி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், ரவீந்திரநாத் மேல்முறையீட்டு மனுவுடன், தங்க தமிழ்ச்செல்வன் மேல்முறையீடு மனுவை இணைத்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தேனி மக்களவை தொகுதி வெற்றி விவகாரத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Theni Lok Sabha ,O. B. Supreme Court ,Rabindranath ,Delhi ,O. B. ,Selvan ,Ravindranath ,Dinakaran ,
× RELATED தேனியில் 28 ஆண்டுக்கு பின் திமுக சாதனை...