×

அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி நீக்கத்துக்கு ஒப்புதல் தராமல் ஒன்றிய அரசு இழுத்தடிப்பு: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாரதிய ஜனதா கூட்டணி முறிவு?

புதுச்சேரி: அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி நீக்கத்துக்கு ஒப்புதல் தராமல் ஒன்றிய அரசு இழுத்தடித்து வருகிறது. இந்த சந்தர்ப்பதை பயன்படுத்தி பாஜ அமைச்சர்களுக்கு முக்கிய இலாகாக்களை கேட்டு முதல்வர் ரங்கசாமிக்கு அமித்ஷா நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், முதல்வர் ரங்கசாமி ஆதரவு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கூட்டணியில் இருந்து வெளியேற போர்க்கொடி தூக்குவதால் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜ கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னையில் எழுந்த புகாரில் கண்டித்தும் மாறாததால் அமைச்சர் பணியை சரியாக செய்யவில்லை என கூறி அவரை டிஸ்மிஸ் செய்து என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த காரைக்கால் எம்எல்ஏ திருமுருகனை புதிய அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று கடந்த 8ம் தேதி ஆளுநர் தமிழிசையை சந்தித்து முதல்வர் ரங்கசாமி பரிந்துரை கடிதம் வழங்கினார். இதையறிந்த சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கும், முதல்வருக்கும் கடிதம் அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில் சாதி ரீதியாகவும், பாலின ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக கூறியிருந்தார்.

ஆனால், இதுவரை சந்திர பிரியங்கா டிஸ்மிஸ் செய்யப்பட்டாரா? ராஜினாமா ஏற்கப்பட்டதா? என்பதை ஆளுநரும், முதல்வரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. வழக்கமாக அமைச்சர் பதவி நீக்கமோ அல்லது இலாகா மாற்றமோ இருந்தால் முதல்வர், கவர்னருக்கு கடிதம் அளித்து ஒரு சில மணி நேரங்களில் அதற்கான அரசாணை வெளியிடப்படும். 13 நாட்களாகியும் அரசாணை வெளியிடாமல் இருப்பது நாட்டிலேயே இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. இது புதுவை அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசாணை வெளியிடாததற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பாஜவை சேர்ந்த முக்கிய நிர்வாகி கூறியதாவது: முதல்வராக ரங்கசாமி, 2021 மே 7ம் தேதி பதவியேற்றார். நீண்ட இழுபறிக்கு இடையே ஜூன் 27ம் தேதி தான் என்.ஆர்.காங்கிரஸ், பாஜ அமைச்சர்கள் பதவியேற்றனர். அதனை தொடர்ந்து இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் உள்துறையை மட்டும் நமச்சிவாயத்துக்கு ஒதுக்கீடு செய்துவிட்டு முக்கியமான மற்றும் வருமான துறைகளான பொதுப்பணித்துறை, கலால், ஆதிதிராவிடர் நலத்துறையை என்.ஆர்.காங்கிரஸ் வசமே வைத்துக் கொண்டது. இதனால் பாஜ அமைச்சர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

பாஜ புதுவை பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி கூட்டம் நடத்தும்போது அதற்கான செலவுகள் குறித்து பேசுகையில் அமைச்சர்களை கைநீட்டுகின்றனர். அப்போது பாஜவை சேர்ந்த அமைச்சர்கள் முக்கிய துறைகள் இல்லாமல், இலாகா பணிகளே நடத்துவதற்கு தள்ளுதள்ளு என தள்ள வேண்டி உள்ளது என குமுறி உள்ளனர். கடந்த காலத்தில் பாஜ அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கும்போது, பின்னாளில் இலாகாவை மாற்றியமைக்கிறோம் என ரங்கசாமி வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால், மாற்றி கொடுக்கவில்லை.

தற்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அமைச்சர் டிஸ்மிஸ் அரசாணை வெளியிடுவதற்கு முன்பாக சந்திரபிரியங்கா வைத்திருந்த போக்குவரத்து, ஆதி திராவிடர் நலம், கலைபண்பாட்டு துறை ஆகியவற்றில் ஒரு சிலவற்றை பாஜ அமைச்சர்களுக்கு மாற்றிக்கொடுக்கவும், ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி கலால் உள்ளிட்ட சில முக்கிய துறைகளை கூடுதலாக பெற்றுக்கொள்ளவும், பாஜ பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதனால் பாஜ அமைச்சர்களுக்கு முக்கிய இலாகாவை பெற இதுதான் நேரம் என்பதால் ரங்கசாமியை வழிக்கு கொண்டு வர உள்துறை அமைச்சர் அமித்ஷா காய் நகர்த்தி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார். சந்திர பிரியங்காவை டிஸ்மிஸ் செய்ய முதல்வர் கொடுத்த கடிதத்தை திட்டமிட்டு மத்திய உள்துறை அமச்சகம் ஏற்கவில்லையென்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அனுமதி கொடுக்காமல் முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடி ஏற்படுத்த ஒன்றிய பாஜ அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.  அமைச்சரை டிஸ்மிஸ் செய்யும் முடிவுக்கு முன்னதாக ஒன்றிய உள்துறையிடம் கலந்தாலோசித்துவிட்டு அவரை டிஸ்மிஸ் செய்திருந்தால் உடனடியாக அனுமதி கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதனை ரங்கசாமி செய்யவில்லை.

தற்போது முதல்வர் ரங்கசாமி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வலியுறுத்தினால் பதவி நீக்க கடிதத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், ரங்கசாமி பிடிவாதமாக இருப்பதால், தேஜ கூட்டணி அரசு என்றாலும், பாஜ நினைத்தால்தான் எதுவும் செய்ய முடியும் என்பதை உணர்த்தவே ரங்கசாமிக்கு அரசியல் ஆட்டத்தை பாஜ அரசு காட்டி வருகிறது. இதனால் ஒன்றிய பாஜ அரசு மீது என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
பாஜவுடன் கூட்டணியை விட்டு என்.

ஆர்காங்கிரஸ் வெளியே வர வேண்டும் என ரங்கசாமியிடம் நேரில் வலியுறுத்தி போர்க்கொடி தூக்கி உள்ளனர். ‘என்.ஆர்.காங்கிரசை முழுமையாகவே பாஜகவாக மாற்ற பாஜ தலைமை துடிக்கிறது. கூட்டணி தர்மத்தை மீறி பாஜ செயல்படுகிறது. வேண்டுமானால் நாங்கள் கூட ராஜினாமா செய்துவிட்டு போகிறோம். ஒரு முதல்வருக்கு அமைச்சரவையை மாற்றியமைக்க கூட உரிமையில்லை என்கிறபோது, பொதுமக்களிடம் நம்முடைய இமேஜ் என்ன ஆகும்’ என ரங்கசாமி ஆதரவு எம்எல்ஏ நேரு உள்ளிட்டோர் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

* சந்திரபிரியங்கா இனி எம்எல்ஏதான்: – சபாநாயகர் செல்வம்
சபாநாயகர் செல்வம் கூறுகையில், ‘அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சந்திரபிரியங்கா எம்எல்ஏவாகவே செயல்படுவார். முதல்வர் பரிந்துரைத்த பதவி நீக்க கோப்பு உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று, குடியரசு தலைவரிடம் கோப்பு உள்ளது. இன்றோ அல்லது நாளைக்குள் ஒப்புதல் கிடைக்கும். அதன்பிறகு இது தொடர்பான அரசாணை முறைப்படி வெளியாகும்.

சந்திரபிரியங்கா கவனித்து வந்த போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் முதல்வர் ரங்கசாமி கூடுதலாக கவனித்து வருகிறார். சந்திரபிரியங்கா நீக்கப்பட்டு விட்டார். அவரும் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்ட பிறகு அவர் வகித்த அமைச்சரவை அலுவலகத்தில் இருந்து வந்த செய்திக்குறிப்பு தவறானது. இந்த விவகாரத்தில் என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எந்தவித அதிருப்தியிலும் இல்லை. இன்று கூட (நேற்று) 23 எம்எல்ஏக்கள் ஒன்றாக இணைந்து ஆலோசித்திருக்கிறோம். யாரும் அதிருப்தியில் இல்லை’ என்றார்.

* முதல்வருக்கு அவமானம்
என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், ‘அமைச்சரவையை மாற்றியமைக்கும் அதிகாரம் முதல்வருக்கு இருக்கிறது. அதுவும் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சர்களைத்தான் நாங்கள் மாற்றுகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது. இதை கூட முதல்வர் செய்யக்கூடாது என ஒன்றிய பாஜ அரசு நினைக்கிறதா? இந்த விவகாரத்தில் முதல்வரை அவமானப்படுத்த திட்டமிட்டு செயலாற்றுகிறார்கள். தென்னிந்தியா முழுவதும் பாஜவுக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது. புதுச்சேரியில்தான் பாஜ அங்கம் வகிக்கும் தேஜ கூட்டணி அரசு இருக்கிறது. இதுவும் தொடர வேண்டுமா என்பதை முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றனர்.

* அரசு நிகழ்ச்சியில் அமைச்சராக வலம் வரும் சந்திரபிரியங்கா
புதுச்சேரி மாநிலம் ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் குரும்பகரம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி பொருள் கண்காட்சி காரைக்கால் பஞ்சாட்சரபுரம் கிராமத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியை சந்திர பிரியங்கா குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றி மகளிர் குழுக்களுடன் சிரித்து பேசி, பொருட்களை ரசித்து பார்த்துவிட்டு சென்றார். இந்நிகழ்ச்சியில் துறையின் அதிகாரிகளும் பங்கேற்றனர். இது என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி நீக்கத்துக்கு ஒப்புதல் தராமல் ஒன்றிய அரசு இழுத்தடிப்பு: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாரதிய ஜனதா கூட்டணி முறிவு? appeared first on Dinakaran.

Tags : union government ,minister ,Chandra Priyanka ,NR Congress ,Bharatiya Janata ,Puducherry ,NR Congress Bharatiya Janata Alliance ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...