சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும திட்ட நிதியிலிருந்து மாதவரம் சரக்குந்து முனையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.30.30 கோடி நிதி மற்றும் சென்னை மாநகராட்சியின் இயந்திர பொறியியல் துறையின் மூலம் 51 ஸ்கிட் ஸ்டீர் லோடர்கள் கொள்முதல் செய்வதற்காக ரூ.12.75 கோடி நிதி என மொத்தம் ரூ.43.05 கோடி நிதி வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் கட்டிட அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து ரூ.43.05 கோடி நிதியை, சென்னை மாநகராட்சிக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் வழங்கினர்.
தொடந்து, அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அனைத்து சாலைகளும் முழுமையாக போடப்பட்டுள்ளது. மழைக்காலங்களை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளை சுத்தம் செய்யும் பணிகள் மாவட்டங்கள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை, சாலைப் பணிகள் உள்ளிட்ட பணிகளுக்காக கிட்டத்தட்ட ரூ.2000 கோடியை முதல்வர் ஒதுக்கீடு செய்தார்.
இவற்றில் முதற்கட்டமாக 5000 சாலைப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக விழும் மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் வகையில் மர அறுவை இயந்திரங்கள், மழைநீர் தேங்கினால் அவற்றை அகற்றும் வகையில் 700க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையிலும், பொதுமக்களும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும் அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The post இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் சென்னையில் முதல்கட்டமாக 5000 சாலை பணிகள் நிறைவு: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.
