×

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி ஆன்லைனில் பட்டாசு விற்பனையால் வியாபாரம் பாதிப்பு நடவடிக்கை எடுக்க உரிமையாளர்கள் வலியுறுத்தல் ஆர்டிஓ தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

வேலூர், அக்.20: உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதால் எங்களுடைய வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வேலூரில் நடந்த ஆர்டிஓ ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் வலியுறுத்தினர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆர்டிஓ கவிதா தலைமை தாங்கினார். தாசில்தார்கள் செந்தில் குமார், ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தீயணைப்பு, காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட பட்டாசு கடை உரிமையாளர்கள் சங்க கவுரவ தலைவர் ஜனார்த்தனன் மற்றும் வியாபாரிகள் பேசியதாவது: நாங்கள் பல ஆண்டுகளாக உரிமம் பெற்று பட்டாசு கடை வைத்து வருகிறோம். திடீரென எங்கள் கடையின் அருகே டீக்கடை மற்றும் ஓட்டல்கள் வைத்து நடத்துகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு வியாபாரத்தினை நம்பி பல வியாபாரிகள் உள்ளனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி ஆன்லைன் வியாபாரம் நடைபெறுவதால் எங்களது வியாபாரம் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் ஆன்லைன் வியாபாரத்தால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே ஆன்லைன் வியாபாரத்தை தடை செய்ய வேண்டும். உரிய அனுமதி பெற்று கடையை நடத்தும் நேரத்தில் அதிகாரிகள் திடீரென சோதனை செய்வதால் நாங்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளோம். அனுமதி பெறாமலும் பலர் ஆங்காங்கே விற்பனையை ஏற்படுத்துகின்றனர். ஏதேனும் விபத்து ஏற்பட்டால் ஒட்டுமொத்த வியாபாரிகளையும் பாதிக்கிறது. எனவே சில்லறை விலையில் ஆங்காங்கே பட்டாசுகள் விற்பனை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தீபாவளி பண்டிகையொட்டி சீட்டு கட்டிய பொதுமக்களுக்கு பட்டாசு பாக்ஸ்கள் வழங்குவதற்காக தனிநபர்கள் வீடுகளில் கொண்டு வந்து இருப்பு வைத்துள்ளனர். அவர்கள் எந்த விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

பின்னர் இதற்கு பதில் அளித்து வேலூர் ஆர்டிஓ கவிதா பேசியதாவது: உரிமம் இன்றி பட்டாசுகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு பட்டாசு விற்பனை செய்தால் அவர்கள் குறித்த தகவல்களை உடனடியாக எனக்கு மற்றும் சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் புகார் தெரிவிக்கலாம். பட்டாசு கடைகள் பணியாற்றும் பணியாளர்களுக்கு தகுந்த பயிற்சிகள் வழங்க வேண்டும். கடைகளில் இரு வழி பாதைகள் இருக்க வேண்டும். கடையில் தீ தடுப்பு உபகரணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மின் ஓயர்கள் பாதுகாப்பான முறையில் குழாய்கள் மூலமே கடைக்குள் பதிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

மின் இணைப்பு பெட்டி கடையின் வெளியே வைத்திருக்க வேண்டும். மளிகை கடையில் பட்டாசுகள் விற்பனை செய்ய கூடாது. வீடுகளில் பதித்து வைத்து விற்பனை செய்யக்கூடாது. இது போன்ற புகார்கள் வந்தால் தெரிவிக்கலாம். அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்து இந்த தீபாவளியை விபத்து உள்ளிட்ட அசம்பாவிதம் இல்லாத தீபாவளியாக நடத்த வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வேலூர் கோட்டத்தில் 51 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விண்ணப்பித்துள்ளவர்களின் மனுக்கள் மீது நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி ஆன்லைனில் பட்டாசு விற்பனையால் வியாபாரம் பாதிப்பு நடவடிக்கை எடுக்க உரிமையாளர்கள் வலியுறுத்தல் ஆர்டிஓ தலைமையில் ஆலோசனைக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : RTO ,Supreme Court ,Vellore ,Dinakaran ,
× RELATED அடிப்படை வசதி, பாதுகாப்பு குறைபாடு...