×

அதிமுக ஆட்சி காலத்தில் மருந்துகள் இறக்குமதி செய்த விவகாரம் 5 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் 2வது நாளாக சோதனை: வெளிநாட்டு முதலீடு, போலி ஆவணங்கள் சிக்கியது

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் மருந்துகள் இறக்குமதி செய்த விவகாரத்தில் சென்னையில் உள்ள 5 முக்கிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு சொந்தமான 30 இடங்களில் 2வது நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிமுக ஆட்சியின்போது கொரோனா காலக்கட்டத்தில் அவசர தேவைக்காக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மருந்து இறக்குமதி நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவும், அதை மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யவும் மாநில அரசு நிபந்தனையற்ற அனுமதி வழகங்கப்பட்டது.

அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு சில மருந்து தயாரிப்பு மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் பல கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிமுக ஆட்சி காலத்தில் அதிகளவில் மருந்துகள் தயாரிக்க டென்டர் எடுத்த நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்த நிறுவனங்களின் பட்டியலை வைத்து அவர்களின் உற்பத்தி மற்றும் ஆண்டு வருமானத்தை கணக்கிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, கே.வி.எண்டர்பிரைசஸ் பிரவேட் லிமிடெட் நிறுவனம், பார்க் டவுன் கவர்லால் குழும் மற்றும் அதன் தொழிற்சாலைகள், மாதவரம் ஆதிஷ்வர் எக்ஸிபியண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பார்க் டவுன் கே.பி.மனிஷ் குளோபல் நிறுவனம், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கவ்மன் எக்ஸாக்ட் மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் என 5 நிறுவனங்களுக்கு சொந்தமான கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் என 30 இடங்களில் நேற்று முன்தினம் முதல் இரண்டாவது நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

2வது நாளான நேற்று நடந்த சோதனையில் மருந்துகள் தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்ததில் 2 விதமான கணக்குகள் பராமரித்து வந்ததற்கான ஆவணங்கள், ஹார்ட்டிஸ்க், பென்டிரைவ், சிடி மற்றும் வெளிநாடுகளில் பினாமிகள் பெயரில் உள்ள நிறுவனத்தில் இருந்து மருந்துகள் மற்றும் மருந்து தயாரிக்க பயன்படுத்தும் ரசாயன மூலப்பொருட்கள் கொள்முதல் செய்த ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கணக்காய்வு செய்து வருகின்றனர். அதன் பிறகு தான் எத்தனை கோடி ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தெரியவரும் என வருமான வரித்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

The post அதிமுக ஆட்சி காலத்தில் மருந்துகள் இறக்குமதி செய்த விவகாரம் 5 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் 2வது நாளாக சோதனை: வெளிநாட்டு முதலீடு, போலி ஆவணங்கள் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chennai ,Dinakaran ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...