×

வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா தொடர்ச்சியாக 4வது வெற்றி: சதத்தில் சச்சின் சாதனையை நெருங்கினார் கோஹ்லி; 97 பந்து 103* ரன் 4 சிக்சர் 6 பவுண்டரி

புனே: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்தது. அபாரமாக ஆடிய விராட் கோஹ்லி ஒருநாள் போட்டியில் தனது 48வது சதத்தை விளாசி சச்சின் சாதனையை நெருங்கி உள்ளார். வங்கதேசம்-இந்தியா இடையிலான 17வது லீக் ஆட்டம் புனேவில் நேற்று நடைபெற்றது. வங்கத்தின் ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக ஒய்வெடுக்க நஜ்மல் ஹோசைன் கேப்டன் பொறுப்பை ஏற்றார். ஷாகிப்புக்கு பதில் நசும் அகமதுவும், தஸ்கின் அகமதுக்கு பதில் ஹசுன் முகமதுவும் களம் இறங்கினர்.

தொடர் வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் ரோகித் சர்மா தலைமையிலான அணியில் எந்த மாற்றமும் இல்லை. அதி சிறப்பாக விளையாடி வரும் ஷர்துல் தாகூருக்கு பதில் அஷ்வினோ, ஷமியோ சேர்க்கப்படவில்லை. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்கத்தின் தொடக்க வீரர்கள் தன்ஜித் ஹசன், லிட்டன் தாஸ் பொறுப்பாக விளையாடி இந்திய பந்து வீச்சாளர்களின் பொறுமையை சோதித்தனர். இடையில் பும்ரா மெய்டன் ஓவரும் வீசினார்.
வங்க வீரர்கள் வாய்ப்பு கிடைக்கும் போது பந்தை எல்லைக்கு விரட்டிய வண்ணம் இருந்தனர்.

இன்னிங்சின் 8வது ஓவரில் சிராஜ் 10ரன் கொடுக்க 9வது ஓவரை ஹர்திக் வீச வந்தார். முதல் 3 பந்துகளில் 8ரன் கொடுத்தார். அதில் 3வது பந்து வீசிய ஹர்திக் காலில் ஏற்பட்ட வலி காரணமாக வெளியேறினார். அதனால் அந்த ஓவரில் எஞ்சிய 3 பந்துகளை வலது கை வேகம் கோஹ்லி வீசினார். அதில் 2ரன் மட்டும் தந்தார். தொடர்ந்து ஷர்துல் வீசிய 10வது ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி என 16ரன் விளாசினார் தன்ஜித். தொடக்க வீரர்கள் பவர் பிளேவில் 63ரன் சேர்த்தனர். ஷர்துல் 12வது ஓவரை வீசும் போது தன்ஜித் அடித்த பந்தை கேட்ச் பிடிக்கும் கடினமான வாய்ப்பு தவறவிட்டார்.

ஆனால் 15வது ஓவரில் தன்ஜித் எல்பிடபிள்யூ செய்து குல்தீப் வெளியேற்றினார். அரைசதம் விளாசிய தன்ஜித் 51 ரன் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் விக்கெட்டுக்கு 93ரன் சேர்த்தனர். அடுத்து வந்த கேப்டன் நஜ்மல் 8, மெஹிதி ஹசன் 3 ரன்னில் ஆட்டமிழந்தனர். நீண்ட நேரம் தாக்குப்பிடித்த லிட்டன் தாஸ் 66ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு தவ்ஹித் 16, முஸ்ஃபிகுர் 38, நசும் அகமது 14 ரன்களில் வெளியேறினர். விக்கெட்கள் அடுத்தடுத்த வீழ்ந்தாலும், ஸ்கோரும் கணிசமாக உயர்ந்துக் கொண்டே இருந்தது.

அரை சதத்தை நெருங்கிய மஹமதுல்லாவை 46ரன்னில் பும்ரா கடைசி ஓவரில் போல்டாக்கினார். அதனால் வங்கம் 50ஓவர் முடிவில் 8விக்கெட் இழப்புக்கு 256ரன் குவித்தது. கடைசி பந்தில் சிக்சர் விளாசிய சோரிபுல் 7, முஷ்டாஃபிசுர் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் பும்ரா, சிராஜ், ஜடேஜா தலா 2, ஷர்துல், குல்தீப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதனையடுத்து 257 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, சுப்மன் கில் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். ரோகித் சர்மா 48 ரன்னிலும், அரைசதம் விளாசிய கில் 53 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஸ்ரேயாஸ் 19 ரன்னில் வெளியேறினார்.

முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய விராட் கோஹ்லி ஆரம்பத்தில் நிதானமாக ஆடி பின்னர் வங்கதேச பந்துவீச்சை பந்தாடினார். 41 ஓவர் முடிவில் இந்திய அணி வெற்றிக்கு 2 ரன் தேவை என்ற நிலையில், கோஹ்லி 97 ரன்களுடன் இருந்தார். 42வது ஓவரின் 3வது பந்தில் அவர் சிக்சர் விளாசி அணிக்கு வெற்றி தேடித் தந்ததுடன் ஒருநாள் போட்டியில் தனது 48வது சதத்தை விளாசினார். இந்திய அணி 41.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 261 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி 97 பந்தில் 103 ரன் (4 சிக்சர், 6 பவுண்டரி), கே.எல்.ராகுல் 34 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் லீக் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த சதத்தின் மூலம் ஆட்ட நாயகன் விருது பெற்ற கோஹ்லி, ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த சச்சினின் (49 சதம்) சாதனையை நெருங்கி உள்ளார். இன்னும் ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில் சச்சின் சாதனையை சமன் செய்து கோஹ்லி புதிய வரலாறு படைக்க உள்ளார்.

* பவுலர் கோஹ்லி
விராட் கோஹ்லி அரிதாக பந்து வீசி இருக்கிறார். இதற்கு முன் 49 ஒருநாள் ஆட்டங்களில் சுமார் 107ஓவர்கள் வீசி 4 விக்கெட்களையும் கைப்பற்றி இருக்கிறார். உலக கோப்பைகளில் 2011, 2015ம் ஆண்டுகளில் ஆஸிக்கு எதிராக காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களிலும், 2011ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக கோஹ்லி பந்து வீசி உள்ளார்.

* ஹர்திக் ஆடுவாரா..
ஆட்டத்தில் தனது முதல் ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா 3வது பந்து, பவுண்டரிக்கு பறப்பதை தடுக்க முயன்றார். அதனால் அவர் கணுக்காலில் தசை பிடிப்பு ஏற்பட்டதால் அப்படியே படுத்து விட்டார். எழுந்துக் கொள்ள முயற்சி செய்த போது தடுமாறினார். பிறகு இந்திய மருத்துவக்குழு பரிசோதனை செய்ததில் அவர் உடனடியாக களத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஸ்கேன் செய்யப்பட்டதில் அவருக்கு சிகிச்சையும், ஓய்வும் தேவை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

* பும்ரா, குல்தீப்
வேகம் பும்ராவும், சுழல் குல்தீப்பும் இணைந்து சிக்கனமாக பந்து வீசி ஓவருக்கு 4.2ரன் கொடுத்தனர். மற்ற பந்து வீச்சாளர்கள் எல்லோரும் இணைந்து ஓவருக்கு 6.45ரன் அள்ளிக் கொடுத்தனர்.

The post வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா தொடர்ச்சியாக 4வது வெற்றி: சதத்தில் சச்சின் சாதனையை நெருங்கினார் கோஹ்லி; 97 பந்து 103* ரன் 4 சிக்சர் 6 பவுண்டரி appeared first on Dinakaran.

Tags : India ,Bangladesh ,Kohli ,Sachin ,Pune ,ICC World Cup One Day Cricket Series ,Dinakaran ,
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...