×

பாலஸ்தீனத்தின் பரிதாப வரலாறு: ஹமாஸ் – ஃபத்தாவின் சண்டையும்… விரிவடையும் இஸ்ரேல் ராஜ்ஜியமும்!

பாலஸ்தீனத்திற்கு அடைக்கலம் தேடி வந்த யூதர்கள் இஸ்ரேல் என்கிற புதிய நாட்டை நிறுவி மெல்ல மெல்ல அவர்களின் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தி இன்று பாலஸ்தீனத்தையே உலக வரைபடத்தில் தேடும் அளவுக்கு சுருக்கி விட்டனர். ‘ஊர் இரண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள். அதுபோன்ற கதைதான் பாலஸ்தீனத்தின் வரலாறும். இஸ்ரேலின் ராஜ்ஜியம் இன்றும் கூட விரிவடைந்தபடி செல்வதற்கு பாலஸ்தீனத்தின் 2 முக்கிய அமைப்புகளான ஹமாஸ், ஃபத்தா இடையே இல்லாத ஒற்றுமையும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். காசாவை ஆளும் ஹமாசும், மேற்கு கரையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள பத்தாவும் மாறுபட்ட பார்வையை பிரதிநிதித்துவப்படுத்துவதால் இஸ்ரேல், பாலஸ்தீன மோதல் இன்றளவும் தீராத பிரச்னையாக இருந்து வருகிறது.

ஃபத்தா அமைப்பு 1959ம் ஆண்டு பாலஸ்தீனிய புலம்பெயர்ந்தவர்களால் நிறுவப்பட்டது. இதன் நிறுவனர்களில் ஒருவர் யாசர் அராபத். பாலஸ்தீனிய தேசிய விடுதலை இயக்கமாக உருவாக்கப்பட்ட பத்தா பின்னாளில் பல கட்சிகளை உள்ளடக்கி பாலஸ்தீனிய விடுதலை அமைப்பாக (பிஎல்ஓ) பாலஸ்தீன நாடாளுமன்றத்தில் பெரிய கட்சியாக உருவெடுத்தது. இந்த அமைப்பு பாலஸ்தீன அரசை அடைவதற்கு இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை ஆதரித்தது. இதற்கு நேர்மாறான கொள்கைகளுடன் ஹமாஸ் அமைப்பு 1987ல் நிறுவப்பட்டது.

மேற்கு கரையையும், காசா நிலப்பகுதியையும் ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் முயற்சிக்கு எதிரான முதல் பாலஸ்தீன எழுச்சி தொடங்கிய போது இந்த அமைப்பு உருவானது. எகிப்தின் ஆதரவுடன் தொடங்கிய இந்த அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவதை கொள்கையாக கொண்டிருந்தது. இஸ்ரேல் இல்லாத சுதந்திர பாலஸ்தீன நாட்டை அடைவதே ஹமாசின் லட்சியம். அதனால்தான் ஹமாசை இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடுகள் தீவிரவாத அமைப்பாக அடையாளப்படுத்தின. இஸ்ரேல் மீது பல்வேறு தாக்குதல்களை ஹமாஸ் நடத்தியது. ஆனால், பாலஸ்தீன மக்களை பொறுத்த வரையில் பத்தாவை விட ஹமாஸ் அமைப்பையே பெரிதும் விரும்பினர்.

இஸ்ரேலுக்கு எதிரான ஹமாசின் தாக்குதல்களை தியாகங்களாகவே அவர்கள் பார்த்தனர். அதே சமயம், ஹமாஸ், பத்தா இடையே ஆரம்பத்தில் இருந்தே பெரிய அளவில் ஒற்றுமை இல்லாமலேயே இருந்து வந்தது. 2004ம் ஆண்டு பத்தா அமைப்பின் தலைவர் யாசர் அராபத் மரணமடைந்ததைத் தொடர்ந்து, ஃபத்தா, ஹமாஸ் இடையேயான மோதல் தொடங்கியது. 2005ல் காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு ஹமாஸ் அமைப்பு அரசியலில் களமிறங்கியது. 2006ல் நடந்த பாலஸ்தீன நாடாளுமன்ற தேர்தலில் ஹமாஸ் அமைப்பு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

அதன் பிறகுதான் ஹமாஸ் அமைப்பிற்கும், ஃபத்தாவுக்கு இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. பாலஸ்தீன நிர்வாகத்தை கவனித்து வந்த ஃபத்தா அமைப்பின் தலைவராக இருந்த தற்போதைய அதிபர் முகமது அப்பாஸ் ஹமாசுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்ற ஹமாஸ் அதற்கு முன் பாலஸ்தீன நிர்வாகத்தால் இஸ்ரேலுடன் கையெழுத்திடப்பட்ட அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்தது. இஸ்ரேல் இல்லாத பாலஸ்தீனம் மட்டுமே சாத்தியம் என புதிய சாசனத்தை உருவாக்கியது. இதனால் இஸ்ரேலின் கோபம் அதிகரித்த நிலையில், அதிபர் முகமது அப்பாசின் ஃபத்தா அமைப்பு கூட்டணி அரசில் இருந்து வெளியேறியது.

இதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பு காசா பகுதிக்குள் முடக்கப்பட்டது. காசாவை ஹமாஸ் அமைப்பும், மேற்கு கரை உள்ளிட்ட சில பகுதிகளை ஃபத்தாவின் பாலஸ்தீன நிர்வாகமும் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டன. காசா சிறிய பகுதியாக இருந்ததால் அனைத்து அத்தியாவசிய தேவைக்கும் வெளி உதவியையே நாட வேண்டியிருந்தது. இதனால் காசாவில் பள்ளிகள், மருத்துவமனைகளை ஐநா நிறுவ ஹமாஸ் அமைப்பு அனுமதித்தது. இஸ்ரேலிடம் இருந்து மின்சாரம், உணவு, குடிநீரை பெற்றது.

ஒருகட்டத்தில் அண்டை நாடான எகிப்து, ரபா கிராசிங் வழியாக காசாவிலிருந்து பாலஸ்தீனர்கள் அகதிகளாக தங்கள் நாட்டிற்கு வருவதை விரும்பவில்லை. இது இஸ்ரேலை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய கட்டாய நிலைக்கு ஹமாசை தள்ளியது. இன்றளவும் மேற்கு கரை பகுதியிலும் உலகம் முழுவதும் உள்ள பாலஸ்தீன மக்களின் ஆதரவும் ஹமாசுக்கே அதிகம் உள்ளது. ஆனால், ஹமாஸ், ஃபத்தா இடையே ஒற்றுமை இல்லாததால் இவர்களால் இஸ்ரேலை கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போது நடக்கும் போர் மூலம் ஹமாசை காசாவிலிருந்து இஸ்ரேல் விரட்டினால், அங்கும் தனது ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவது நிச்சயம்.

The post பாலஸ்தீனத்தின் பரிதாப வரலாறு: ஹமாஸ் – ஃபத்தாவின் சண்டையும்… விரிவடையும் இஸ்ரேல் ராஜ்ஜியமும்! appeared first on Dinakaran.

Tags : Palestine ,Hamas ,Fatah ,Israel ,Jews ,Dinakaran ,
× RELATED பாலஸ்தீன போராட்டம் நடத்த முயன்ற...