×

காரில் ரூ.2.76 லட்சம் லஞ்ச பணம் பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது

செங்கோட்டை: தமிழ்நாடு – கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பணி முடித்துச் சென்ற போக்குவரத்து பெண் இன்ஸ்பெக்டர் காரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.2.76 லட்சம் பறிமுதல் செய்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம், தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது புளியரை மோட்டார் வாகன சோதனை சாவடி. இந்த சோதனைச் சாவடியில் லாரி டிரைவர்களிடம் லஞ்சம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி பால் சுதர் தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை முதல் புளியரை மோட்டார் வாகன சோதனைச்சாவடி அருகே மப்டியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இங்கு நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்த மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் பிரேமா ஞானகுமாரி, பணிகளை முடித்துக் கொண்டு நேற்று காலை 8.30 மணிக்கு கணவரான ஷாட்சனுடன் வீட்டிற்கு காரில் புறப்பட்டு சென்றார். செங்கோட்டை அடுத்த தவணைவிலக்கு அருகே அந்த காரை தடுத்து நிறுத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் இன்ஸ்பெக்டர் பிரேமா ஞானகுமாரி கொண்டு சென்ற பேக்கில் கட்டுக்கட்டாக ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 400 பணம் இருந்தது கண்டுபிடித்தனர். விசாரணையில், அந்த பணம் கனரக லாரி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு நபர்களிடம் லஞ்சமாக வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிந்து பிரேமா ஞானகுமாரியை ைகது செய்தனர்.

* ரூ.25,000 லஞ்சம்: உதவி பொறியாளர் கைது
திருப்பூர், மங்கலம் ரோடு, பெரியாண்டிபாளையத்தை சேர்ந்தவர் பழனிவேல் (55). இவர் மாநகராட்சியில் குடிநீர் குழாய் பதிக்கும் ஒப்பந்ததாரராக உள்ளார். இவரிடம் திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டல உதவி பொறியாளர் சந்திரசேகர் (52) பில் தொகை கொடுக்கும் எம்-புக்கில் கையெழுத்திட ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதை நேற்று குமார்நகர் நீர்தேக்க தொட்டி அருகே இருந்த உதவி பொறியாளர் சந்திரசேகரிடம் பழனிவேல் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சந்திரசேகரை கைது செய்தனர். அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதை நடைமுறைப்படுத்தாததால் உதவி பொறியாளர் பணியிலேயே தொடர்ந்த நிலையில் லஞ்சம் வாங்கி கைதானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post காரில் ரூ.2.76 லட்சம் லஞ்ச பணம் பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Chengottai ,Pulirai ,Tamil Nadu ,Kerala ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...