×

சோகத்தில் மூழ்கிய மேல்மருவத்தூர்: பங்காரு அடிகளார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பங்காரு அடிகளாரின் ஆன்மீக சேவையை பாராட்டி அவருக்கு பத்ம ஸ்ரீ விருதை ஒன்றிய அரசு 2019-ல் வழங்கியுள்ளது. ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி புரட்சி செய்தவர். தம்மை பின்பற்றுவோர் மற்றும் ஆதி பராசக்தி கோயில் பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்பட்டார் பங்காரு அடிகளார்.

பங்காரு அடிகளாரை பின்பற்றும் பக்தர்கள் 15 நாடுகளில் உள்ளனர். சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்தவர் பங்காரு அடிகளார். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு நாளை இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. கோயில் அருகிலேயே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமாதி ஒன்றை கட்டி வைத்துள்ளார் பங்காரு அடிகளார். பங்காரு அடிகளார் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமனார் என்ற செய்தியறிந்து வருந்தினோம். கலைஞர் அவர்கள் மீதும் – கழகத்தலைவர் அவர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். மகளிர் எல்லா நாளும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற முற்போக்கு தளத்தில் ஆன்மிகத்தை நிறுத்திய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அடிகளாரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அவரை பின்பற்றும் லட்சோப லட்ச பொதுமக்கள் அனைவருக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாநிதி மாறன் எம்.பி. ; மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அங்குள்ள கோவில் கருவறையில் அனைத்து நாட்களிலும் பெண்கள் பூஜை செய்யலாம் என்ற முறையை அமல்படுத்தி ஆன்மிகப் புரட்சி செய்தவரும், சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளை செய்தவருமான பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தெலங்கானா ஆளுநர்; மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் தலைவர், ஆன்மீக குரு அருட் பங்காருஅடிகளார் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும்,மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அனைத்து சமூக மக்களையும் அரவணைத்து செவ்வாடை உடுத்தி சாமானிய பெண்களுக்கும் இறைவழிபாடு நம்பிக்கை ஊட்டி கரு சுமக்கும் பெண்களை கருவறை வரை சென்று தானே பூஜித்து வலம் வந்து எப்போதும் வழிபட வழிகண்ட ஆன்மீக தமிழ்மகனுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அவரது ஆன்மீக சேவைக்கும், கல்விச் சேவைக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது.

பக்தர்களால் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்ட அருட் பங்காரு அடிகளாரின் இழப்பு ஆன்மீக உலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,சித்தர் பீடம் சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சக்தி அன்னையை பிராத்திக்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம்; மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவரும், பக்தர்களால் அன்போடு ‘அம்மா’ என்றழைக்கப்பட்டவரும், ஆதி பராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவரும், மிகச் சிறந்த ஆன்மீகவாதியுமான பங்காரு அடிகளார் அவர்கள் திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் எவ்வித நிபந்தனையுமின்றி கருவறை வரை சென்று பெண்கள் பூஜை செய்யவும், வழிபடவும் அனுமதித்து மிகப் பெரிய ஆன்மீக புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார் .

உலக அளவில் சக்தி வழிபாட்டுத் தலங்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு. ஆன்மீக பணிகளோடு, பல சமூக நலப் பணிகளையும் சிறப்பாக ஆற்றிய பெருமைக்குரியவர் பங்காரு அடிகளார். இவரது ஆன்மீகச் சேவையை பாராட்டி மத்திய அரசு ‘பத்ம ஸ்ரீ’ விருதினை இவருக்கு வழங்கியது. இந்திய நாடு ஒரு மிகச் சிறந்த ஆன்மீகவாதியை இழந்துவிட்டது. இவருடைய இழப்பு இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஆகும். இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. திரு. பங்காரு அடிகளார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீட நிர்வாகிகளுக்கும், பக்தர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வானதி சீனிவாசன்; மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய அன்னை ஆதிபராசக்தியை பிரார்த்திக்கிறேன். ஓம் ஷாந்தி.

டிடிவி தினகரன்; கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதில் தொடங்கி அனைத்து விதமான ஆன்மீகப் பணிகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆன்மீக குருவாக திகழ்ந்தவரும், பக்தர்களால் பாசமாக ‘அம்மா’ என அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆன்மீகவாதிகளில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த பங்காரு அடிகளார் அவர்களை இழந்து வாடும் உறவினர்களுக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மீகப் பணிகளோடு, மாணவர்களை நற்பண்புகளுடன் வளர்க்கக்கூடிய கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் என பங்காரு அடிகளார் ஆற்றிய ஏராளமான தொண்டுகள் அவரின் புகழை என்றென்றும் பாடிக் கொண்டே இருக்கும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி; அம்மா’ பங்காரு அடிகளாரின் மறைவால் வருத்தமடைந்தேன். பண்பட்ட ஆன்மா மற்றும் சிறந்த ஆன்மிக குரு அவர். கல்வி, சுகாதாரம், சமூக சீர்திருத்தங்களுக்கான அவரது பங்களிப்புகள் என்றும் நம்மை ஊக்குவிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி.

எடப்பாடி பழனிசாமி; மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவருமான பங்காரு அடிகளார், தனது 82-ஆவது வயதில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். ஆசிரியராக பணியைத் தொடங்கிய பங்காரு அடிகளார் அவர்கள், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி ஆன்மிக சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, கோயில் கருவறையில் பெண்களும் பூஜை செய்யலாம் என்பது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை ஆன்மிகத்தில் செய்தவர்.

மேலும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என பல்வேறு கல்வி நிலையங்களை உருவாக்கி கல்வி சேவை ஆற்றியதோடு, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் மூலம் மக்களுக்கு சேவை ஆற்றியவர். மனித குலத்திற்கு ஆற்றிய சேவைக்காக பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அன்னாரது இழப்பு ஆன்மிக பக்தர்களுக்கு பேரிழப்பாகும். பக்தர்களால் அம்மா என வணங்கப்பட்ட பங்காரு அடிகளார் அவர்களை இழந்து அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், லட்சக்கணக்கான வாடும் பக்தர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், பங்காரு அடிகளார் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கே.எஸ்.அழகிரி; 1985 ஆம் ஆண்டு மரத்தடி ஒன்றின் கீழ், ஓலை குடிசையில் அமர்ந்து, குறி சொல்ல ஆரம்பித்து, படிப்படியாக மக்களிடையே கடவுள் நம்பிக்கை வளர்த்து, ஆன்மீக புரட்சி செய்து, சாதாரண ஏழை, எளிய, பாமர மக்கள் மத்தியில் பெண் தெய்வ வழிபாட்டை வளர்த்தெடுத்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் தனது 82வது வயதில் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். ஒரே தாய், ஒரே குலம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், கடவுள் வழிபாட்டில் ஜாதி சமய வேறுபாடுகளை தகர்த்து, கருவறைக்குள் பெண்களை அனுமதித்து, தரிசிக்க, அபிஷேகம் செய்ய வாய்ப்புகளை வழங்கி மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர்.

பக்தர்கள் அனைவரும் செவ்வாடை அணிந்து மேல்மருவத்தூரில் சில முக்கியமான நிகழ்வுகளின்போது தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்து மொழி வேறுபாடுகளை கடந்து ஆயிரக்கணக்கில் வாகனங்களிலும், பேருந்துகளிலும் மேல்மருவத்தூரில் குவிந்து வழிபட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெரும் எண்ணிக்கையிலான பக்தர்களின் வருகையால் ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்ற அமைப்பை உருவாக்கி, தமிழ் வழிபாட்டு முறையை நெறிப்படுத்தினார். திருமுருக கிருபானந்த வாரியார் மறைவிற்கு பிறகு தமிழ் வழிபாட்டு முறையில் மாபெரும் புரட்சி செய்தவர் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார். ஊராட்சி பள்ளியில் ஒரு சாதாரண ஆசிரியராக இருந்து, சைக்கிள் பயணம் செய்து, எளிய வாழ்க்கையை மேற்கொண்ட பங்காரு அடிகளார் நாடுபோற்றும் ஆன்மீக குருவாக உருவெடுத்தார்.

கடவுள் வழிபாட்டின் மூலம் பக்தியை வளர்த்த அதே நேரத்தில், கோயில் நிர்வாகத்தில் கிடைத்த வருமானத்தின் மூலம் கல்வித்துறையில் நுழைந்து மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, பொறியியல் கல்லூரி, பள்ளிக் கல்வி என நிறுவனங்களை தொடங்கி அடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் ஏற்றம் பெறுகிற வகையில் பொது நல சேவை செய்தவர் பங்காரு அடிகளார். அவரது மறைவு ஆன்மீக உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரை வழிபடும் எண்ணற்ற பக்தர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எல்.முருகன்; மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் நிறுவனர் அம்மா பங்காரு அடிகளார் உடல் நல குறைவால் தனது 82-ஆம் வயதில் காலமானார், நம் ஆன்மீக பாரத தேசத்திற்கு இது பெரும் இழப்பு. அனைவருக்கும் ஆன்மீக குருவாய் இருந்து, அனைவரது வளர்ச்சிக்கும் குருவாய் வழிகாட்டியவர் அம்மா பங்காரு அடிகளார் அவர்கள். நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உள்ளத்திலும் அம்மா அவர்கள் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

ஆன்மீகத்தில் மட்டுமின்றி கல்வி வேலை வாய்ப்பு என பல நற்பணிகளை தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளியோர்களுக்காக அர்ப்பணித்துள்ளார். அம்மா அவர்களது ஆன்மீக சேவையை பாராட்டி 2019-ஆம் ஆண்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அரசு அம்மா அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவப்படுத்தியது. அவரது குடும்பத்தாருக்கும் பக்தர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வி.கே.சசிகலா; மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். பங்காரு அடிகளாரின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத வகையில் ஆன்மீக உலகிற்கே ஒரு பேரிழப்பாகும். ஆன்மீக குருவாக திகழ்ந்த பங்காரு அடிகளார் அவர்களின் தன்னலமற்ற ஆன்மீக சேவைகளை பாராட்டி பத்ம ஸ்ரீ விருது அளித்து கௌரவிக்கப்பட்டது. மேலும், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பெண்களும் கருவறைக்குள் சென்று பூஜை செய்திடும் வகையில் சிறந்த ஆன்மீக சீர்திருத்தங்களை கொண்டு வந்த பெருமைக்குரியவர்.

ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு கல்வியை அளித்த, தங்களை நாடி வந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் எண்ணற்ற உதவிகளை வழங்கிய பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவருடைய உறவினர்களுக்கும், அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல்; மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தின் தலைவர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது அடிகளார் அவர்கள் ஆன்மீக நுண்ணறிவுகளுக்காக நன்கு அறியப்பட்டவர், அவரது ஆன்மீகம், சடங்கு நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிறுவனர் தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் முக்தி அடைந்தார் என்ற செய்தியை தொடர்ந்து அம்மாவின் பிரிவு துயராற்ற, அடுத்து இரண்டு நாட்களுக்கு நமது கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. நாளைய நடைபயணத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துவிட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் காத்திருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், பாஜக சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், தவிர்க்கவியலாத காரணத்தினால், நடைபயணத்தில் ஏற்பட்டுள்ள இந்த தேதி மாற்றத்தைப் பொறுத்தருள வேண்டிக் கொள்கிறேன். திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான நடைபயண தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

The post சோகத்தில் மூழ்கிய மேல்மருவத்தூர்: பங்காரு அடிகளார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Melmaruvathur ,Bhangaru Adidyar ,Malmaruvathur Bhangaru Adikar ,Bhangaru Adikiar ,Atiprashakti Siddhar Faculty ,Atiprashakti ,Bangaru Adidyar ,
× RELATED மேல்மருவத்தூர் அருகே ரயில்வே...