×

கன்று குட்டியை இழுத்து சென்ற சம்பவம்; மர்ம விலங்கை பிடிக்க கூண்டு வைப்பு: தீர்த்த குமாரசாமி கோவிலுக்கு செல்ல தடை


மொடக்குறிச்சி: அரச்சலூர் அருகே மர்ம விலங்கு நேற்று கன்று குட்டியை இழுத்துச் சென்ற சம்பவத்தை அடுத்து வனத்துறையினர் மர்ம விலங்கை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு அருகே உள்ள ஆனைக்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (59), விவசாயி. இவருக்கு அரச்சலூர் அருகே உள்ள ஓம் சக்தி நகரில் 13 ஏக்கர் தோட்டம் உள்ளது. நாகமலை அடிவாரத்தின் கீழ் உள்ள இந்த தோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை தோட்டத்தில் வேலையும் செய்யும் நபர் வழக்கம்போல் பால் கரப்பதற்காக மாட்டு கொட்டைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த 9 மாத கன்று குட்டி காணாமல் போயிருந்தது. இதுகுறித்து சண்முகசுந்தரத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில், அங்கு வந்த சண்முகசுந்தரம் கன்று குட்டியை தேடி பார்த்துள்ளார். அப்போது கன்று குட்டியை மர்ம விலங்கு இழுத்துச் சென்ற கால் தடம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அரச்சலூர் வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், ஈரோடு வனச்சரகர் சுரேஷ் சம்பவ இடத்திற்கு சென்று மர்ம விலங்கின் கால் தடத்தை பதிவு செய்தார்.

மேலும் மர்ம விலங்கை பிடிப்பதற்காக கூண்டு மற்றும் 10க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி உள்ளனர். மேலும் ஈரோடு வனத்துறையினர் நாக மலையில் உள்ள தீர்த்த குமாரசாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம், மர்ம விலங்கை கூண்டு வைத்து பிடிக்கும் வரை வனப்பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலமாக அறிவுறுத்தி வருகின்றனர்.

The post கன்று குட்டியை இழுத்து சென்ற சம்பவம்; மர்ம விலங்கை பிடிக்க கூண்டு வைப்பு: தீர்த்த குமாரசாமி கோவிலுக்கு செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Drittha Kumarasamy ,MODAKURICHI ,ARACHALUR ,Tirtha Kumarasamy ,Temple ,Dinakaran ,
× RELATED காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு