ஜெருசலேம்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இங்கிலாந்தும் ஆதரவு தெரிவித்துள்ளது. அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளார். இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் இஸ்ரேல் அதிர்ந்து போனது.
பின்னர் சுதாரித்து கொண்டு ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக தொடுத்தது. இதுவரை இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 5 முறை போர் ஏற்பட்டு இருந்தாலும் இதுவரை அல்லாத அளவுக்கு தற்போது நடந்து வரும் போர் உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த போரினால் அப்பாவி மக்கள் பலியாவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. காசா மீது வான்வழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழி தாக்குதலையும் நடத்த தயாராகி வருகிறது. இதற்கிடையே, தான் காசாவில் உள்ள அல்-அல்ஹி மருத்துவமனை மீது நேற்று முன்தினம் இரவு பயங்கர ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிகிச்சை பெற்ற நோயாளிகள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
12 நாட்களாக நடந்து வரும் போரில் காசா தரப்பில் மட்டும் சுமார் 5,500 பேர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,400 பேர் பலியாகியுள்ளனர். 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மருத்துவமனை நடந்த தாக்குதல் சம்பவம் உலகையே அதிர வைத்துள்ளது. இஸ்ரேல்தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று ஹமாஸ் அமைப்பினர் குற்றம் சாட்டினர். ஆனால் இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஹமாஸ் படையினர் இஸ்ரேல் நோக்கி ஏவிய ராக்கெட்தான் தவறுதலாக மருத்துவமனையில் விழுந்து வெடித்ததாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறி உள்ளார். இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் மத்திய கிழக்கு நாடுகளில் நிலைமையை விபரீதமாக்கி உள்ளது. ஜோர்டான், ஈரான், எகிப்து, லெபனான், துனிசியா, உள்ளிட்ட பல மத்திய கிழக்கு நாடுகளில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்துள்ளன. இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரையிலும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இனியும் இதுபோன்ற போர் குற்றங்களை பொறுத்து கொண்டிருக்க முடியாது என பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் எச்சரித்துள்ளார். இந்த போர் அபாயகரமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லாவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ேமலும் உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக ஜோர்டான், எகிப்து, சவுதிஅரேபியா, பக்ரைன் உள்ளிட்ட அரபு நாடுகள் காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலை வன்மையாக கண்டித்துள்ளன.
அதுமட்டும் இன்றி ஜோர்டான், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனிடையே காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. மற்றும் அதன் மூத்த தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல் காசாவில் உடனடியாக சண்டை நிறுத்தத்தை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.நா. சபையிடம் 22 அரபு நாடுகள் வலியுறுத்தின. இதற்கிடையில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கான ஆதரவை தெரிவிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேலுக்கு சென்றார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். அப்போது அவர், ‘ஹமாஸ் அமைப்பினர் ஐ.எஸ். பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள். இஸ்ரேல் தன்னை தற்காத்து கொள்ள தேவையான அனைத்தையும் அமெரிக்கா உறுதி செய்யும்.
காசா மற்றும் மேற்கு கரையில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக சுமார் ரூ.832 கோடி நிதியுதவியை அமெரிக்கா அளிக்கும்’ என்றார். பின்னர் இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை ஜோ பைடன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஜோ பைடனின் சந்திப்பு ரத்து அதன் பின்னர், போர் நடந்து வரும் மிகவும் இக்கட்டான சூழலில், இஸ்ரேலுக்கு வந்து தனது ஆதரவை தெரிவித்ததற்கு ஜோ பைடனுக்கு பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்தார். மேலும், தற்போது நடந்து வரும் போர் நாகரிக சக்திகளுக்கும் காட்டுமிராண்டித்தனத்தின் சக்திகளுக்கும் இடையிலான போர். இஸ்ரேலின் பின்னால் அணிதிரளுமாறு இதர நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
இதனிடையே போரில் இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கைக்கு அரபு நாடுகளின் ஆதரவை கோர ஜோ பைடன் திட்டமிட்டிருந்தார். அதற்காக, ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மானில் அரபு நாடுகளின் தலைவர்களுடன் உச்சி மாநாட்டை நடத்த இருந்தார். ஆனால், காசா மருத்துவமனை மீது நடந்த குண்டுவீச்சின் காரணமாக ஜோ பைடன் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதை ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் அய்மன் சபாதி தெரிவித்தார். போர்க்கப்பல்களை அனுப்பும் அமெரிக்கா இதனிடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு எந்த நேரத்திலும் உதவும் வகையில் மேலும் சில போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்ப அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 10 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில் காசா பகுதிக்கு குறைந்த அளவிலான மனிதாபிமான உதவிகளை வழங்க எகிப்தை அனுமதி அளிக்க இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 13வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில்தான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் இன்று மாலை இஸ்ரேல் செல்கிறார். அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதிபர் இசாக் ஹெர்சோக் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டிற்கு செல்ல உள்ளதாக இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக ரிஷி சுனக் வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்களின் ஒவ்வொரு உயிர் பலி போவதும் கொடூரமானது. ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலால் பல உயிர்கள் பறி போயிருக்கின்றன’ என்று கூறியிருந்தார். அதேபோல், காசாவில் மனிதாபிமான வழித்தடத்தை திறக்க வேண்டும் எனவும் காசாவில் சிக்கியுள்ள இங்கிலாந்து நாட்டினரை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் வலியுறுத்துவார் என்று சொல்லப்படுகிறது.
அப்படி சொல்லவில்லை ஜோ பைடன்
இஸ்ரேல் பயணத்தை முடித்து கொண்டு அமெரிக்கா புறப்படுவதற்காக ஏர்போர்ஸ் விமான நிலையம் வந்தார்.அப்போது ஜோ பைடனிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக இஸ்ரேல் மீது ஹெஸ்பெல்லா பயங்கரவாதிகள் போரை முன்னெடுத்தால் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருடன் அமெரிக்க ராணுவமும் கை கோர்க்கும் என்று இஸ்ரேலிடம் கூறியதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியதாக வெளியான தகவல் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு ஜோ பைடன், ‘அந்த தகவலில் உண்மையில்லை, நான் ஒருபோதும் அப்படி சொல்லவில்லை’ என்றார். மேலும், ‘காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செய்வதற்காக 20 டிரக்குகளை அனுமதிக்க எகிப்து அதிபர் ஒப்பு கொண்டுள்ளார்’ என்றும் தெரிவித்தார். இஸ்ரேலில் இருந்து அமெரிக்கா திரும்பியுள்ள ஜோ பைடன், இஸ்ரேல் மீதான ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த உரையாற்றவும் திட்டமிட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.
லெபனான் பயணத்தை தவிர்க்க அமெரிக்கர்களுக்கு அறிவுரை
ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று லெபனான் எல்லையை ஒட்டி இருக்கும் இஸ்ரேலிய ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணைகளை வீசி தாக்கியதாகவும், இதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலர் பலியானதாகவும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் உடனடியாக விளக்கம் அளிக்கவில்லை. இதனிடையே இஸ்ரேல்-லெபனான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருவதால் அமெரிக்க மக்கள் லெபனானுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
போர் எந்த பிரச்னையையும் தீர்க்காது; போப் ஆண்டவர்
காசாவில் நடந்து வரும் மனிதாபிமான பேரழிவுக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களை பற்றி யோசிக்கிறேன். காசாவின் நிலைமை அவநம்பிக்கையானது. போர் எந்த பிரச்சினையையும் தீர்க்காது. அது மரணத்தையும் அழிவையும் மட்டுமே விதைக்கிறது, வெறுப்பை அதிகரிக்கிறது, பழிவாங்கலை பெருக்குகிறது. ஆயுதங்களை அமைதிப்படுத்துங்கள். ஏழைகள், மக்கள், குழந்தைகளின் அமைதிக்கான முழக்கத்தை கேளுங்கள்’ என்றார்.
The post இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 13 வது நாளாக போர் நீடிப்பு; இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் பயணம் appeared first on Dinakaran.